(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.11, 2014.01.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)
பூகோள வல்லரசுகளுக்கு இடையில் சமுத்திரங்களில் நிகழும் மோதல்கள் தந்திரோபாய நோக்கம் கொண்டவைகளாகும்.தரையில் நிகழவேண்டிய அரசியல் காட்சிநிலைகளை சாத்தியமாக்குகின்ற சூழலை சமுத்திரங்களில் நிகழும் மோதல்களே தீர்மானிக்கின்றன. கடல் ஆதிக்க கனவினைக் காணாத அரசுகளால் வல்லரசாக வளரமுடியாது. வல்லரசுகளாக வளர்ந்துள்ள ஐக்கிய அமெரிக்கா,ரஸ்சியா,பிரான்ஸ்,பிரித்தானியா,யப்பான் போன்ற நாடுகள் கடல் சார்ந்த கட்டமைப்புக்கள் ,தொழில்நுட்பங்களை விருத்தி செய்துள்ளன. சர்வதேச வல்லரசுகளின் பொருளாதாரத்திற்குத் தேவையான சக்திவள விநியோகத்தில்; கடல் போக்குவரத்து பாரிய பங்களிப்பு செய்து வருகின்றது.
கடல்சார்ந்த போட்டி
இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் தந்திரோபாய இலக்கினை சீனாவிற்கும் ,இந்தியாவிற்கும் இடையில் நடைபெறும் கடல்சார்ந்த போட்டியே தீர்மானிக்கவுள்ளது. இந்தியக் கடற்படையின் உடனடி இலக்கு பாக்கிஸ்தானின் செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதும், இந்தியாவின் விசேட பொருளாதார வலயத்தினை (Exclusive Economic Zones – EEZ) முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதுமேயாகும். ஆனால் நீண்டகாலத்தில் இந்துசமுத்திரப்பிராந்தியத்தினைப் படிப்படியாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே சீனக் கடற்படையின் இலக்காகும்.
1980 களிலிருந்து தனது கரையோரக் கடற்படையை (Green Water to Blue Water) ஆழ்கடல் கடற்படையாகத் தரமுயர்த்தும் முயற்சியில் சீPனா கவனம் செலுத்தி வருகின்றது.மேற்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் தனக்கு இருக்கும் நலனைக் குறிப்பாக தாய்வான் கால்வாயினைப் பாதுகாப்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்தாலும், நீண்ட காலத்தில் சீனாவின் ஆழ்கடல் கடற்படையின் வளர்ச்சி இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்ற அச்சம் இந்தியாவிடம் உள்ளது.
சீனக் கடற்படையின் தரம்,வலிமை என்பவற்றுடன் ஒப்பிடும் போது இந்தியக் கடற்படையின் தரம், வலிமை என்பன திருப்திகரமானதல்ல என்ற மனக்குறை இந்தியாவின் பாதுகாப்பு நிபுணர்களிடம் உள்ளது. ஆயினும் தென்சீனாவின் துறைமுகங்களிலிருந்து சீனாவின் கடற்படை இந்துசமுத்திரப் பிராந்தியத்திற்குள் உடனடியாக நுழைவதற்கான வலு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அதாவது மிகவும் ஒடுங்கிய மலாக்கா நீரிணையினை கடந்து வந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் நடமாடும் சர்வதேசத் துருப்புக்களை அவதானிக்கும் தந்திரோபாயத் திறன் ஒப்பீட்டு ரீதியில் சீனாவிற்;கு மிகவும் குறைவாகவேயுள்ளது. இத்தந்திரோபாயக் குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்காக முத்துமாலைத் தொடர் என்னும் புதியதொரு தந்திரோபாயத்தினை சீனா ஆரம்பித்தது.
அண்மைக்காலமாக ஆசிய நாடுகளாகிய பாக்கிஸ்தான், பர்மா, வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளுடன் அரசியல்ääவர்த்தக நலன்சார்ந்த உறவுகளை சீனா விருத்தி செய்து வருகின்றது. பாக்கிஸ்தானில் உருவாக்கப்பட்ட க்வாடர் துறைமுகம், அந்தமான் கடலிலுள்ள பர்மாவின் கொக்கோ தீவுகளில் விருத்தி செய்யப்பட்ட புலனாய்வு சமிச்சை வசதிகள் கொண்ட தொடர்பாடல் நிலையம் என்பவற்றின் மூலம் தனது இராணுவத் தேவைகளைச் சீனா பூர்த்தி செய்து வருகின்றது. மேலும் பல வர்த்தக துறைமுகங்களை பர்மா, வங்காளதேசம், இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கும் முயற்சிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது. கடற்கொள்ளைகளைத் தடுப்பதற்கும்; தனது கடல் வலிமையினைப் பலப்படுத்துவதற்கும் இத்துறைமுகங்களை சீனா பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில்; இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் இராணுவத் தேவைகளுடன் தொடர்புடைய வகையில் துறைமுக வசதிகளை சீனா உருவாக்கி வருவதாக இந்தியா நம்புகின்றது.
விமர்சனங்கள்
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வடபகுதியில் குறிப்பாக அத்தமான் தீவுகள் மற்றும் பர்மா போன்ற இடங்களில் சீனாவின் கடற்படையின் பிரசன்னம் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆயினும் சீனாவினால் உருவாக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் வர்த்தக நோக்கிலானவையாகும் என்ற கருத்தும் வலுப்பட்டுள்ளது. எனவே இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா கட்டமைத்து வரும் துறைமுகங்கள் அல்லது கடல் தளங்கள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் உருவாக்கப்படுவதாகக் கூறப்படும் விமர்சனங்களைப் புறந்தள்ள முடியாது.
மேலும் சிலர் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவிற்கு இருக்கும் அக்கறை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானதொன்றல்ல. பதிலாக இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவிற்குள்ள கடல் வழித் தொடர்பாடல் நலனைப் பாதுகாப்பதற்கான தந்திரோபாயச் செயற்பாடு மாத்திரமேயாகும் எனக் கூறுகின்றார்கள்.
இந்தியாவினைச் சூழவுள்ள அரசுகளின் கடற்பிரதேசங்களைச் சுற்றி வளைப்பதனூடக இந்தியாவினைச் சுற்றி வளைப்பது அல்லது இந்து சமுத்திரப்பிராந்தியத்திலுள்ள நாடுகளுடன் நட்புறவினைப் பேணுவதன் மூலம் நேரடியாக இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதே சீனாவின் நோக்கமாகும் என சிலர் வாதிடுகின்றார்கள்.
வெளிப்படையாகக் கூறினால், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல்சார்ந்த தந்திரோபாயப் போட்டி நிகழ்ந்து வருகிறது. இப்போட்டியில் இந்துசமுத்திரத்தில் தனக்குத் தேவையான கடல் பாதுகாப்பிற்குத் தேவையான இந்தியாவின் ஆதரவை நேரடியாக இந்தியாவினைப் பகைத்துக் கொண்டு சீனாவினால் பெற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவின் முன்மொழிவு
இந்நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் மேற்கு பசுபிக் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியங்களைச் சூழ்ந்துள்ள ஐக்கிய அமெரிக்கா உட்பட ஆசிய வல்லரசுகளுக்கிடையிலான கூட்டுப்பாதுகாப்புத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்தார். இதனடிப்படையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் தந்திரோபாயச் செயற்பாடு தொடர்பாக பின்வரும் செயற்பாடுகளை இந்தியா செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றார்கள்.
-
இந்தியா தனக்குரிய அதிகார வீச்சினை அதிகரித்தல்
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனக்கான பாதுகாப்பினை அதிகரிப்பதனூடாக சீனாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
-
மலாக்கா நீரிணை உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியங்களிலுள்ள நீரிணைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்.
இந்நிலையில் இந்தியா படிப்படியாக தனது கடற்படையின் வலுவினை அதிகரித்து வருவதுடன்,இந்து சமுத்திரம் முழுவதும் தனக்கான கடல்பாதுகாப்பு வலைப்பின்னலையும், உறவினையும் விஸ்தரித்து வருகிறது. குறிப்பாக மொறிசியஸ், சீசெல்ஸ், ஓமான், கட்டார், சிங்கப்பூர் போன்ற இந்துசமுத்திரத்திற்குள் நுழைகின்ற நுழைவாயிலிலுள்ள நாடுகளுடன் தனது நட்புறவினை விருத்தி செய்து வருகின்றது. இவைகளில் சில அரசுகள் இந்தியாவினை தமக்கான பாதுகாப்பு வழங்குனராக ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்தியா இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. மொறிசியஸ், மாலைதீவுகள் போன்ற நாடுகளுக்கு கூட்டுப்பாதுகாப்பினை வழங்குவது மாத்திரமன்றி இந்நாடுகளின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குபவராகவும் இந்தியாவுள்ளது.
இந்தியாவின் தந்திரோபாயச் சிந்தனையில் கடல்சார் தந்திரோபாயம் பாரிய வகிபங்கினை கொண்டுள்ளது. வல்லரசு என்ற அந்தஸ்த்தினை இந்தியா அடைகின்ற போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதன் தந்திரோபாய செயற்பாடுகள் மேலும் விருத்தியடையும். ஐக்கிய அமெரிக்காவுடன் கூட்டுச் செயற்பாடுகளை இந்தியா மேற்கொண்டாலும்,இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் ஆதிக்கத்தினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதே இந்தியாவின் நீண்டகாலக் கனவாகும்.இதற்காக இந்துசமுத்திரப்பிராந்தியத்திலுள்ள பல அரசுகளுடன் குறிப்பாக இந்து சமுத்திரத்தின் தென்மேற்கிலுள்ள மொசாம்பிக் கால்வாய், வடமேற்கிலுள்ள பாரசீகக் குடா, வடகிழக்கிலுள்ள மலாக்கா நீரிணை போன்றவற்றை மையப்படுத்தி இந்தியா தனது பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தி வருகின்றது.