அரசியல் விஞ்ஞானமும் ஏனைய சமூகவிஞ்ஞானப் பாடங்களும்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்றவகையில் எல்லா சமூகவிஞ்ஞானங்களும் மனிதனுடன் தொடர்புபட்டவைகளாகும். மனித அறிவினைப் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதால் அதனைத் தனித்தனியாக பெயரிட்டு அழைக்க முடியாதுள்ளது. எனவே தேவையற்ற விரிவாக்கங்களைத் தவிர்க்கும் முகமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கற்கை அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. இவ்யதார்த்தத்தினை உணர்ந்த சமகால ஆய்வாளர்கள் சமூக நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு கற்கை நெறிகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஏனைய சமூக விஞ்ஞானக் கற்கை நெறிகளுக்கும் அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறிக்கும் இடையிலான தொடர்பினை ஆராய்வது பயனுடையதாகும்.

வரலாறு

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் பதிவுகளாகும். இது பல்வேறு விடயங்கள் அடங்கிய அறிவுத்தொகுதியாகும். ஒரு நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு, எப்படி நடந்தது என்பதைக் கூறுவது வரலாறாகும். ஆகவே அரசியல் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கு வரலாறு பெரும் பயனுடையதாகும். ஆய்வாளர்களுக்கு அரசியல் விஞ்ஞானங்கள் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால், வரலாற்றினூடாக அரசியல் நிறுவனங்கள் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பதை அறிந்து கொள்ள முடியும். அனேக அரசியல் விஞ்ஞானக் கோட்பாடுகளை வரலாற்றின் உதவியின்றி விளங்கிக் கொள்ளவோ, சரியாக மதிப்பிடவோ முடியாது. உதாரணமாக பிளேட்டோ, அரிஸ்டோட்டில் ஆகியோர்களின் கோட்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு கிரேக்கம் பற்றிய வரலாற்று அறிவு தேவையானதாகும். பதினேளாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம், மகோன்னதப் புரட்சிகளை விளங்கிக் கொண்டால்தான் கொப்ஸ், லொக் ஆகியோர்களது கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியும். மேலும், சில அரசியல் கோட்பாடுகள் அரசியல் யதார்த்தத்தின் இயல்புகளை விளக்குவதற்கு வரலாற்று முறைமைகளைப் பயன்படுத்தி சில முக்கிய முடிவுகளுக்கு வந்துள்ளன. மாக்கியவல்லி வரலாற்று ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டே ஆட்சியாளர்களுக்கான தனது ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அக்ரன் பிரபு (Acton) “ஆற்றிலுள்ள மணலிற்குள் இருக்கும் தங்கத் துகள்கள் போன்று வரலாற்று நீரோட்டத்திற்குள் அரசியல் விஞ்ஞானம் பாதுகாக்கப்பட்டுள்ளது” எனக் கூறுகின்றார். ஜோன் சீலி வரலாற்றுக்கும் அரசியல் விஞ்ஞானத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கூறும்போது “அரசியல் விஞ்ஞானம் இல்லாத வரலாறு பழமில்லாத மரம் போன்றது. வரலாறு இல்லாத அரசியல் விஞ்ஞானமானது வேரில்லாத மரம் போன்றது” எனக் கூறுகின்றார். இரண்டு கற்கை நெறிகளும் ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவைகள் என்பதை மறுப்பதற்கில்லை. தேசியவாதம், ஏகாதிபத்தியம், தனியாள்வாதம், சோசலிசம் போன்ற தத்துவங்களும், இயக்கங்களும் இல்லாமல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாறு இருக்க முடியாது. அரசியல் விஞ்ஞானமும், வரலாறும் ஒன்றுக்கொன்று பங்களிப்பதுடன், ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துகின்றன. பிறிமன் இரண்டு கற்கை நெறிகளுக்குமிடையிலான தொடர்புபற்றிக் கூறும்போது “வரலாறு என்பது கடந்தகால அரசியலாகும். அரசியல் என்பது சமகால வரலாறாகும்” எனக் கூறுகின்றார். அரசியல் விஞ்ஞானம் தகவல்களுக்காகவும், மூலப் பொருட்களுக்காகவும் வரலாற்றில் தங்கியுள்ளது. யுத்தம், புரட்சிகள், இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார மாற்றங்கள், சமய, சமூக இயக்கங்கள் போன்ற நிகழ்ச்சிகளை காலவரிசைப்படுத்தி வரலாறு தருகின்றது. ஆயினும், அரசியல் விஞ்ஞானமும், வரலாறும் வேறு வேறு பிரச்சினைகளைக் கையாளுகின்ற இரண்டு கற்கை நெறிகளாகும்.

பொருளியல்:-

ஆரம்பகாலம் முதல் அண்மைக்காலம் வரை பொருளாதாரம் அரசியல் விஞ்ஞானத்துடன் தொடர்புபட்டதாகவே கருதப்படுகின்றது. கிரேக்கத்தில் பொருளாதாரத்தினை அரசியல் பொருளாதாரம் என்ற பெயரிலேயே அழைத்தார்கள். அரிஸ்டோட்டிலின் அரசு பற்றிய வகைப்படுத்தலில் அரசு வறிய அல்லது செல்வந்தர்களால் ஆழப்படுவதாகும் என்ற பிரதான விடயம் கூறப்பட்டுள்ளது. ஆங்கில பழம்பெரும் பொருளியல் கோட்பாட்டாளராகிய அடம்ஸ்மித் தேசங்களின் செல்வம் என்னும் நூலில் அரசியல் பொருளாதாரத்தின் முக்கிய நோக்கங்களை சுட்டிக்காட்டுகின்றார். அரசியல் விஞ்ஞானமும், பொருளாதாரமும் ஒன்றிற்கு ஒன்று துணைக்கற்கை நெறிகளாக உள்ளன. அரசியல் விஞ்ஞானமும் பொருளாதாரமும் பொதுவான இலக்கு நோக்கியே கற்பிக்கப்படுகின்றன. மனிதனிற்கான நலன்புரிச் சேவைகள் சமூகத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பின் மூலமே அடையப்படக்கூடியதாகும். ஏனெனில் நலன்புரி நடவடிக்கைகளும், சமூக ஒழுங்கமைப்பும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட முடியாதவைகளாகும். சமூக ஒழுங்கமைப்பினைப் பாதுகாக்கக்கூடிய திறன் அரசிடமேயுள்ளது. அரசின் நோக்கம் மனிதனுக்கு சிறப்பான வாழ்க்கையினை வழங்குவதும், வளர்வதற்கும், அபிவிருத்தியடைவற்கும் எல்லோருக்கும் சம சந்தர்ப்பத்தை வழங்கக்கூடிய சூழ்நிலையினைத் தோற்றுவிப்பதாகும். இரண்டு கற்கை நெறிகளுக்குமிடையிலான நெருங்கிய உறவினை கார்ணர் பின்வருமாறு விபரிக்கின்றார். “அரசியல் மற்றும் சமூக வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தவைகளாகும். புதிய அரசாங்கம் ஒன்றின் உருவாக்கம் கூட பொருளாதார நிலமைகளின் செல்வாக்கிற்குட்பட்டே நிகழ்கின்றன. பொருளாதாரத்தின் மீதான அரசியலின் இடையூடாட்டம் மிகவும் தெளிவானதாகும். செல்வத்தின் உற்பத்தி, விநியோகம் என்பன குறிப்பிட்ட காலம் வரையில் நடைமுறையிலிருக்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. அனேக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அரசியல் செயற்பாடுகளுடாகவே தீர்வு காணவேண்டியுள்ளது. மறுபக்கத்தில் அரசாங்கம் ஒன்றின் அடிப்படைப் பிரச்சினைகள் பொருளாதாரச் சிக்கல்களினாலேயே ஏற்படுகின்றன. மேலும் வரிச்சட்டங்கள், வர்த்தக வரையறைச் சட்டங்கள் போன்றன பொதுவாக பொருளாதார உறுதித்தன்மையினைப் பொறுத்தே ஆதரிக்கப்படுகின்றன அல்லது எதிர்க்கப்படுகின்றன. அரசாங்கத்திற்கும், சுதந்திரத்திற்கும் இடையிலான உறவு தொடர்பான வினா பொருளாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே விரிவாக்கமடைகின்றது” எனக் கூறுகின்றார். சோசலிசக் கோட்பாட்டில் அரசியலும் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருங்கியதாகும். அனேக சமூகக் கோட்பாட்டாளர்கள் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் இவைகளுக்கும் தனியார் சொத்துக்களுக்குமிடையிலான உறவு தொடர்பாக ஆராய்கின்றனர். சமகால அரசியல் கோட்பாடுகள் பொருளதாரத்தினை நோக்கிய தலைப்புக்களைக் கொண்டவைகளாகவேயுள்ளன. டவுண்ஸ், புச்சானன், சோசுன்பேக், ஒல்சன் போன்றவர்கள் புதிய அரசியல் பொருளாதார பகுப்பாய்விற்கான அடிப்படை விடயங்களை வரையறுக்கின்றனர். வில்லியம் சி.மிற்செல் என்பவர் “புதிய அரசியல் பொருளாதாரம்” என்ற பெயரையே வழங்குகின்றார்.

சமூகவியல்:-

ஆகஸ்ட் கொம்ட் சமூகவியலின் தந்தையாக சர்வதேசரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவராகும். சமூகவியல் கற்கை நெறி சமூகத்தின் தோற்றம், பரிணாமம், அமைப்பு, செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்கின்றதுடன், அரசு என்பது சமூக அமைப்பின் ஒரு பகுதி எனவும் கூறுகின்றது. அரசியல் விஞ்ஞானத்திற்கும், சமூகவியலுக்குக்கும் இடையிலான கூட்டுறவு கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முதன்மைப்படுத்தப்பட்டு வருவதுடன், அரசியலுக்கான சமூகவியல் அடித்தளத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சமூகவியல், அரசியல் நிகழ்ச்சிக்கான சமூகவியல் வியாக்கியானங்களைத் தருகின்றது. லிப்செற் என்பவர் “அரசியல் ஒழுங்குமுறையினை பகுப்பாய்விற்கான பெரும்பகுதியாக அங்கீகரிக்காமல் சமூகம் பற்றிய கல்வியை சமூகவியலாளர்கள் யாரும் கற்கவில்லை. அண்மைக்காலத்தில் அனேக அரசியல் விஞ்ஞானிகள் சமூகவியல், உளவியல் உறவுகள் இல்லாமல் அரசியல் செயன்முறைப்படுத்தல்கல்வி சாத்தியமற்றதாகும்” எனக்கூறுகின்றார். அரசியல் ஒழுங்குமுறை என்ற எண்ணக்கரு அரசியல் சமூகவியலில் கையாளப்படுகின்றது. இதன்மூலம் அரசியலுக்கும்ää சமூகவியலுக்கும் இடையில் எல்லைக் கோடுகள் கிடையாது என்ற முடிவுக்கு வரவும் முடியாது. சர்ரோறி என்பவர் “விதிமுறைக்குட்பட்ட சமூக ஒழுங்குமுறைக் கோட்பாடு எங்கே நிறுத்தி விடப்படுகின்றதோ அங்கே விதிமுறைக்குட்பட்ட அரசியல் ஒழுங்கு முறைக்கு கோட்பாடு ஆரம்பமாகின்றது” எனக் கூறுகின்றார். அரசியல் விஞ்ஞானம் மனித அமைப்பாகிய அரசினை மாத்திரமே கவனத்தில் கொள்கின்றது. சமூகவியல் எல்லா வகையான மனித அமைப்புக்களுடனும் தொடர்புபடுகின்றது. அரசியல் விஞ்ஞானத்திற்கும், சமூகவியலுக்கும் இடையிலான நெருங்கிய உறவினை கார்ணர் பின்வருமாறு விபரிக்கின்றார். “தனித்துவமானதும், தனித்தனியானதுமான இரண்டு கற்கை நெறிகளாகிய அரசியல் விஞ்ஞானமும், சமூகவியலும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் பங்களிப்புச் செய்கின்றன. பெரும் அறிவுப்பரப்பாகிய அரசின் செயற்பாடு, ஒழுங்கமைப்பு போன்றவற்றினை சமூகவியல், அரசியல் விஞ்ஞானத்திலிருந்தே பெற்றுக் கொள்கின்றது. இதேபோல் சமூகவியலில் பெரும் அறிவுப்பரப்பாகிய அரசியல் அதிகாரத்தின் தோற்றம், சட்டங்கள், சமூகக்கட்டுப்பாடு போன்றவற்றினை அரசியல் விஞ்ஞானம் சமூகவியலில் இருந்தே பெறுகின்றது. அரசியல் விஞ்ஞானமும் சமூகவியலும் ஒன்றிற்கு ஒன்று கடமைப்பட்டிருந்ததுடன், ஒன்றிற்காக மற்றொன்று பயன்படுத்தப்பட்டும் வருகின்றது” எனக் கூறுகின்றார்.

உளவியல்:-

உளவியலுடன் அரசியல் விஞ்ஞானத்தினை இணைத்து ஆய்வு செய்கின்ற அனேக கோட்பாடுகள் உள்ளன. கேபிரிஎல்ராட், லப்ஒன், மக்ட்டக்ஒல், கிரஹம்வொலஸ், ப்போல்ட்வின் போன்ற முன்னணி ஆய்வாளர்கள் எல்லா அரசியல் பிரச்சினைகளுக்கும் உளவியலூடான விளக்கத்தினைக் கொடுத்தார்கள். இவர்கள் அரசின் ஐக்கியத்தினை உளவியல் விடயங்களிடம் ஒப்படைத்தனர். அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் சட்டங்கள் என்பன மக்களின் உணர்ச்சிவசப்படும் மனப்பாங்குக்குள்ளாகும் பழக்கங்களுடன் ஒத்துப் போகக் கூடியனவாகும். டபிள்யு.எச்.ஆர்.றிவர்ஸ் எழுதிய “உளவியலும் அரசியலும்” ஹரொல்ட் லாஸ்வெல் எழுதிய “உளநோயியலும் அரசியலும்” என்ற இரு நூல்களும் உளவியல் மூலாதாரத்தினைக் கொண்டு அரசியலை ஆய்வு செய்திருந்தன. அண்மைக்காலத்தில் பிரபல்யமான புதிய ஆய்வுமுறை அறிமுகமாகியுள்ளது. அதாவது, “அரசியல் உளவியல்” என்ற பெயருடன் புதிய கற்கைநெறி எழுச்சியடைந்து எல்லோருடைய கவனத்தினையும் ஈர்த்து வருகின்றது. ஈ பார்க்னர் என்பவர் “எங்களுடைய தந்தையர்கள் உயிரியல் சார்ந்து சிந்தித்தார்கள். நாங்கள் உளவியல் சார்ந்து சிந்திக்கின்றோம்” எனக் கூறுகின்றார். இப்புதிய சிந்தனையின் கருத்து யாதெனில் அரசியல் கல்வி உளவியல் நோக்கிலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், மனிதர்களின் பழக்கவழக்கங்கள், இயல்பு, மனநிலை, உணர்ச்சிகள், நாகரீகம், இயல்புணர்ச்சி போன்றன அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டு முக்கிய வகிபாகத்தினை ஆற்றுகின்றது என்பதாகும். மக்களுடைய அரசியல் கலாசாரம் உளவியல் விடயங்களினாலேயே உருவாக்கப்படுகின்றது. வோல்ரர் லிப்மன் “மனித இயல்புகளை மேற்கோளாக கொள்ளாத எங்களுடைய அரசியல் சிந்தனைகளால் ஆழமான தவறுகள் ஏற்படுகின்றன” எனக் கூறுகின்றார். பேராசிரியர் கற்லின் “அரசியலுக்கும் உளவியலுக்கும் இடையிலான உள்ளார்ந்த தொடர்பு மிகவும் முக்கியமாக இருந்தது” எனக் கூறுகின்றார். பிறைஸ் “விருப்பத் துணிவு, சார்பு நாட்டம், மனப்பழக்கவழக்கங்கள் போன்ற உளவியல் வேர்களைக் கொண்டதே அரசியல் கல்வி” எனக் கூறுகின்றார். வாக்காளர் நடத்தை, பொது அபிப்பிராயம் போன்ற ஆய்வுகள் உளவியலின் உதவியுடனேயே ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. இதேபோன்றே மக்களுடைய மனநிலை, உளப்பாங்கு என்பன அரசாங்கம் ஒன்றின் எழுச்சி, வீழ்ச்சி. புரட்சி, வன்முறைகள் என்பவற்றை தீர்மானிக்கின்றன எனலாம்.

புவியியல்

அரசியல் விஞ்ஞானமும், புவியியலும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ள கற்கை நெறிகளாகும். அரசு ஒன்றின் இயல்பு, செயற்திறன் என்பவற்றை புவியியல் தன்மை தீர்மானிக்கின்றது என அரசியல் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர். இக்கற்கை நெறிகள் இரண்டிற்கும் இடையிலான உறவு, பிற்பட்ட காலத்தில் ‘அரசியல் புவியியல்’ என்றதொரு புதிய கற்கை நெறி உருவாவதற்கு காரணமாக இருந்தது. ஜோன் போடின் என்பவர் அரசியல் விஞ்ஞானத்திற்கும் புவியியலுக்கும் இடையிலான உறவினை முதன் முதலில் உருவாக்கியிருந்தார். மேலும், ரூசோ காலநிலையின் தன்மைக்கும் அரசாங்கங்களின் வடிவத்திற்கும் இடையிலான உறவினை உருவாக்கியிருந்தார். இவரின் கருத்துப்படி வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நிலவும் எனவும், குளிர் அதிகமாக இருக்கும் நாடுகளில் காட்டுமிராண்டிகளின் ஆட்சி நிலவும் எனவும், மிதமான காலநிலை நிலவும் நாடுகளில் நல்லாட்சி நிலவும் எனவும் கூறுகின்றார். பிரான்சிய அரசியல் தத்துவஞானியாகிய மொண்டெஸ்கியுவும் “ஒரு நாட்டின் பௌதீகத் தன்மை அரசாங்கங்களின் வடிவத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றதாகக்” கூறுகின்றார்.

அறவியல்

நன்னெறி என்பது ஓர் கற்கை நெறியாகும். இது ஒழுக்கம், விதிமுறைகள் என்பவற்றுடன் தொடர்புடையதொன்றாகும். இது மனிதனுடைய சரியானதும், தவறானதுமான நடத்தைகளை ஆராய்கின்றது. அதாவது மனிதர்களுடைய நெறிமுறை சார்ந்த எண்ணக்கருக்களுடன் இது தொடர்புபட்டதாகும். சூழலில் உருவாக்கப்படும் மனித நிறுவனங்கள் நன்னெறி எண்ணங்களுடன் தொடர்புபட்டு உருவாக்கப்படுகின்றன. நன்னெறிக்குப் புறம்பாக இயங்கும் நிறுவனங்கள் சமூகத்தில் தொடர்ந்து இயங்குவதில்லை. எனவே சமூகத்தில் இயங்கும் எல்லா நிறுவனங்களும் மனிதர்களுடைய நெறிமுறை, நன்னெறி எண்ணங்களை உயர்த்துவதாகவேயுள்ளன. அரசு என்ற நிறுவனமும் பிரசைகளின் நன்னெறிகளை உயர்த்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இவ்வகையில் அரசியல் விஞ்ஞானத்திற்கும் நன்னெறிக்கும் இடையில் பிரிக்கமுடியாத தொடர்பு இருப்பதாக பிளேட்டோவும், அரிஸ்டோட்டலும் கூறுகின்றனர். இவர்கள் இருவரும் அரசிற்கான நன்னெறி விடயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். பிளேட்டோ இது தொடர்பாக கூறும் போது “சமூகத்தின் ஆத்மாவாகிய அரசு அறிவுபூர்வமாகவும், அவசியமாகவும் நன்னெறி இலக்குகளுடன் இணைக்கப்பட வேண்டும்” எனக் கூறுகின்றார். பேராசிரியர் பிறவுண் “அரசியல் கோட்பாடு இல்லாத நன்னெறிக் கோட்பாடு பூரணத்துவமற்றது. ஏனெனில் மனிதன் கூடி வாழும் இயல்பு கொண்டவன். அவனால் தனித்து வாழ முடியாது நன்னெறிக் கோட்பாடு இல்லாத அரசியல் கோட்பாடும் பயனற்றதாகும். ஏனெனில், நன்னெறி பற்றிய கற்கையும், அதன் பெறுபேறுகளும் நன்னெறி விழுமியங்களிலும், சரி, பிழை என்பது தொடர்பான எண்ணங்களிலும் தங்கியுள்ளது”. எனக் கூறுகின்றார். நெறிமுறை விடயங்களிற்கூடாகவே தனிநபர்களின் உரிமைகள் நன்மைக்கும், தீமைக்கும் ஏற்றதாகவுள்ளது என்பதை அரசு அங்கீகரித்து வரையறுக்கின்றது. அரசு ஒன்றின் இலக்குகள் அடையப்பட வேண்டுமாயின், மனிதர்களின் அடிப்படை உரிமைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும். அரசியல், பொருளாதார, தனிப்பட்ட உரிமைகள் யாவும் சமூகத்தில் மனிதனின் அங்கத்துவத்திற்கான உரிமைகளாகும். அரசு இவ் உரிமைகளை மதிக்கவில்லையாயின், தனிநபர்கள் அரசுடன் ஒத்துழைப்பார்களா? அல்லது அரசிற்கு எதிராக செயற்படுவார்களா? என்ற வினாவினைக் கேட்க முடியும். இவ்வினாவிற்கு, தூய்மையான அரசியல் தளத்திலிருந்து பதிலளிக்க முடியாது. அரசாங்கம் மதுபானம், பராயமடையாதோர் திருமணம், சமூக ஒடுக்குமுறை போன்றவற்றைத் தடுக்கச் சட்டம் இயற்றுகின்றதாயின் இது சரியானதா? என்ற வினாவினையும் கேட்க முடியும். இளவரசன் என்ற நூலில் மாக்கியவல்லி “அரசன் நரியைப் போல் தந்திரமுள்ளவனாகவும், சிங்கத்தைப் போல் வீரம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றார். இது சரியானதா? என்ற வினாவினையும் கேட்க முடியும். மாக்கியவல்லியின் இக்கருத்து நன்னெறிக்கும், அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டினையே எடுத்துக் கூறுகின்றது. இன்று அரசியல் விஞ்ஞானமும், நன்னெறியும் தனி;த்துவமான கற்கை நெறிகளாகவேயுள்ளன.

சட்டம்

சட்டம் அரசியல் விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகும். சட்டத்தின் பண்பு, இயல்பு, உருவாக்கப்படும் முறை, செயற்படுத்தப்படும் முறை போன்றன அரசியல் விஞ்ஞானத்தில் கற்பிக்கப்படுகின்றன. அரசிற்கு மையமாக இருப்பது சட்டமாகும். சட்டங்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சட்டத்துறை சட்டத்தினை இயற்றுகின்றது. நிர்வாகத்துறை சட்டத்தினை அமுல்படுத்துகின்றது. நீதித்துறை சட்டத்திற்கான வியாக்கியானத்தினைக் கொடுக்கின்றது. அரசாங்கத்தின் மூன்று துறைகளும் சட்டத்தின் அடிப்படையில் சட்டத்துடன் தொடர்புடையனவாகும். அரசு சட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டதொரு நிறுவனமாகும். அரசு மீது மக்கள் வழக்கு தொடர முடியும் மக்கள் மீதும் அரசு வழக்குத் தொடர முடியும். அரசு சட்டத்தினைத் தோற்றவிக்க, சட்டம் அரசினைத் தோற்றுவித்துள்ளது. சட்டத்திற்குள் அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம், பொதுச் சட்டம், சட்ட ஆட்சி என பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பினும் அரசியலமைப்புச் சட்டம், பொதுச் சட்டம் என்பன அரசியல் விஞ்ஞானத்துடன் நெருங்கிய தொடர்புடைய சட்டங்களாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

15,291 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>