அரசியல் விஞ்ஞானக் கற்கைநெறியானது மிகவும் பரந்துபட்டதொரு பாட நெறியாகும். அத்துடன், இயங்கியல் பண்பினைக் கொண்டதொரு பாடநெறியுமாகும். காலத்துக்குக் காலம் பல மாற்றங்களையும், அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாடநெறியாகும். இதனாலேயே ஆர்.எச்.சொல்ரா (R.H.Saltau) “அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவான பணியல்ல” எனக் கூறுகின்றார். அரசு, அரசாங்கம் தொடர்பாகவும், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் இவற்றிற்கிடையிலிருந்த உறவு தொடர்பாகவும், அரசியல் விஞ்ஞானத்தில் கற்பிக்கப்படுகிறது. காலத்திற்குக் காலம் முறையாக ஏற்படும் அபிவிருத்தி பற்றியும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபிவிருத்தி பற்றியும் எதிர்வு கூறுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஹொப்ஸ், ஜேர்மனியைச் சேர்ந்த வெபர், ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த மெரியம் போன்ற அதிகாரக் கோட்பாட்டாளர்கள் “அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கு அதிகாரத்தின் நோக்கம், மூல வளங்களின் முக்கியத்துவம் என்பவற்றைக் கற்கவேண்டும்” எனக் கூறுகின்றார்கள். ஆயினும், இந்நிலையில் அதிகாரத்தினை மட்டும் விளங்கிக் கொண்டால் போதாது. மனிதர்களுடைய உளவியல், அரசியல் தத்துவங்கள் போன்றவற்றினையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஏனைய நிறுவனங்களாகிய தொழிற்சங்கங்கள், திருச்சபைகள், வியாபாரக் கூட்டுத்தாபனங்கள் போன்றவைகள் அதிகாரத்திற்கான போராட்டத்தில் வகிக்கும் வகிபாகம் தொடர்பாகவும் அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்கின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். மரபுசார் நோக்கில், அரசியல் விஞ்ஞானமானது அரசின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால பண்புக் கூறுகளைக் கற்கின்றதொரு பாடநெறியாகும். இன்னோர் வகையில் கூறின் காலத்திற்குக் காலம் அரசின் தன்மை எத்தகையதாக இருந்தது, இருக்கின்றது, இருக்கலாம் என்பது தொடர்பாக ஆய்வு செய்கின்றதொரு கற்கை நெறியாகும்.
கடந்த காலத்தில் அரசின் தன்மை எத்தகையதாக இருந்தது என்பதை கவனத்தில் கொண்டால், வரலாற்று ஆசிரியர்கள் கடந்தகாலத்தில் அரசு எவ்வாறு இருந்தது என்பதற்கு அதிகாரத்தின் தோற்றம், பரிணாமம் என்பவற்றின் அடிப்படையில் விளக்கமளிக்கின்றார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தினையும், அரசியல் யாப்புக் கல்வி இலகுவான தன்மையிலிருந்து சிக்கலான தன்மைக்கு எவ்வாறு பரிணாமமடைந்தது என்பது தொடர்பாகவும் வரலாற்றாசிரியர்கள் மதிப்பீடு செய்தார்கள். அத்துடன், சமுதாயத்தில் அதிகாரத்தினையும், செல்வாக்கினையும் செலுத்துகின்ற நிறுவனங்கள், குழுக்களின் வகிபாகத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அரசியல் கோட்பாடுகளுடனும் அரசு தொடர்புபடுகின்றது. உண்மையில் வரலாற்று ரீதியான நம்பகத்தன்மையுடன் தொடர்புபடுத்தியே அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்க வேண்டும் என நிர்ப்பந்திக்க வேண்டிய அவசியமில்லை.
அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறியின் செயற்பரப்பினைக் கற்பதற்குத் தற்காலத்தில் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியல் நிறுவனங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். தற்கால நிறுவனங்கள், எண்ணங்கள், செயல்முறைப்படுத்தல்கள் போன்றவற்றை விளங்கிக் கொள்வதற்கு அதிகாரத்தின் பரிணாம வளர்ச்சி, அரசியல் நிறுவனங்கள் பற்றிய கற்கை என்பன பெரிதும் உதவுகின்றன. எனவே, அரசின் தோற்றம், இயல்பு, தொழிற்பாடு, இலக்கு என்பவைகளை அனுபவ அவதானத்தினூடாக கற்கவேண்டும். மேலும், அரசாங்கங்கள் உருவாக்கப்படுதல் பற்றியும், அவற்றின் நன்மை, தீமைகள் பற்றியும் கலந்துரையாடப்படுதல் வேண்டும். அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லையை அரசு,அரசாங்கம் என்பவற்றுடன் மட்டுப்படுத்தாமல், அதற்கு மேலாக, அரசியல் கட்சிகள், நலன் பேணும் குழுக்கள், சுதந்திரம், சமத்துவம் பற்றிய விடயங்கள், அவற்றிற்கிடையிலான தொடர்புகள், அரசின் அதிகாரத்துக்குள் எழும் தனிமனித சுதந்திரம் பற்றிய வினாக்கள், சர்வதேச சமுதாயத்தில் அரசின் அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றிய கற்கையாகவும் அரசியல் விஞ்ஞானம் வியாபித்துச் செல்கின்றது.
அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லையினை எவ்வாறு வகைப்படுத்தினாலும், தற்காலத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை அதிகாரம் பற்றிய கல்வியாக உருவாக்கவே முயற்சிக்கப்படுகின்றது. அதிகாரம் என்றால் என்ன? அதிகாரப் போராட்டம் என்றால் என்ன? அதிகாரப் போராட்டத்திற்கான மூலகாரணங்கள் எவை? போன்ற கடுமையான வினாக்களுடன் அண்மைக்கால அரசியல் விஞ்ஞானிகள் ஈடுபாடுகாட்டி வருகின்றனர். கொப்ஸ், பிஸ்மார்க், லாஸ்வெல், கப்லன், நீட்சே, ட்ரொட்ஸ்கி, மக்ஸ்வெபர், சார்ல்ஸ் ஈ மெரியம், வொட்ஸ்கின், மோகென்தொ, றஸ்செல் போன்றவர்கள் இவ்வாறான கோணத்திலேயே அரசியல் விஞ்ஞானத்தினை நோக்கினார்கள். இவர்கள் ‘அதிகாரம் பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானமாகும்’ மேலும், ‘சமூகம் ஒன்றின் மனித நடத்தை மீதான அதிகாரத்தின் கட்டுப்பாடு, அதன் பாவனை என்பன பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானம். இதனைவிட ‘அதிகாரத்தில் பங்குகொள்வதற்கான போராட்டம்’ அல்லது ‘அதிகாரத்தினைப் பகிர்வதற்கான போராட்டம் பற்றிய கல்வியே அரசியல் விஞ்ஞானம்’ எனப் பல்வேறு விளக்கங்களை அதிகாரத்துடன் தொடர்புபடுத்திக் கொடுத்துள்ளனர். அரசு சமூகத்தின் எல்லா அமைப்புகளிலிருந்தும் வேறானது. அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் வாக்குச் சீட்டிற்காக ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடுகின்றன. அதிகாரம் அரசின் அந்தஸ்தினை உயர்த்த அல்லது குறைக்க காரணமாகின்றது. இதுவே அதிகாரம் பற்றிய உண்மையான பண்புகளாகும்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரசியல் விஞ்ஞானம் எத்தகைய பாடப்பரப்பினைக் கொண்டிருக்க வேண்டும் என்பது விவாதிக்கப்பட்டு, யுனெஸ்கோவின் அனுசரணையுடன் சர்வதேச விஞ்ஞானச் சங்கம் இது தொடர்பான இறுதித் தீர்மானத்தினை எடுத்திருந்தது. இத்தீர்மானத்தின்படி அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்பாக பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. அவைகளாவன, அரசியல் கோட்பாடுகளும் அவைகள் பற்றிய முறைமைகளும், தேசிய அரசாங்கமும் தேசிய அரசியலும், பொது நிர்வாகம், ஒப்பீட்டு அரசாங்கமும் ஒப்பீட்டு அரசியலும், சர்வதேச உறவுகள் என்பனவாகும்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய தலைமுறை அரசியல் விஞ்ஞானிகள் அதிகாரத்திற்கான போராட்டத்திற்கும் சமூக வாழ்க்கைக்குமான உறவுகளை மையமாகக் கொண்டு சிந்தித்திருந்தனர். இவர்கள், மரபுசார் பண்புகளாகிய வரலாறு, மெய்யியல், சட்டம் போன்ற அணுகுமுறைகளுக்கூடாக அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதை எதிர்த்தனர். அரசியல் பண்புக் கூறுகளின் பல்வேறு மட்டங்களில் தனிமனிதனுடைய நடத்தை முதன்மையடைகின்றது. எனவே அரசுää அரசாங்கம் பற்றிக் கற்பதைவிட எல்லா அரசியல் பண்புகளுக்குமான நடைமுறைக்கல்வியைக் கற்க வேண்டும் என்ற புதிய சிந்தனை உருவாகியது. கிரஹெம் வொலஸ் “மனிதனுடைய உளவியல் பற்றிய அறிவில்லாமல் அரசியலைக் கற்பது அர்த்தமற்றது” எனக் கூறுகின்றார். எனவே அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கான புதியதொரு அணுகுமுறையாக நடத்தைவாதம் எழுச்சியடைந்ததுடன் அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பின் ஒரு பகுதியாகவும் கொள்ளப்பட்டது.
அரசியல் விஞ்ஞானம் இயங்கியல் பண்பு கொண்டது என்பதால், இருபதாம் நூற்றாண்டின் அரைப்பகுதியிலும், இறுதிப்பகுதியிலும் மேலும் பல புதிய விடயங்கள் செயற்பரப்பெல்லைக்குள் உள்வாங்கப்பட்டன. முதல் அரைப்பகுதியில் வேகமாக வளர்ச்சியடைந்த ஜனநாயக, சோசலிஸ, பாஸிச கருத்துக்களைக் கொண்ட அரச முறைமைகளின் வளர்ச்சி அரசியல் விஞ்ஞான பாடப்பரப்பிலும் மாற்றத்தினை ஏற்படுத்தியது. ஜனநாயக அரச முறைமையின் வளர்ச்சியானது புதிய பல விடயங்களை அரசியல் விஞ்ஞான செயற்பரப்பிற்குள் கொண்டு வந்தது. பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஜனாதிபதி அரசாங்க முறைமை, பிரதிநிதித்துவ முறைமை, அரசியல் கட்சிகள், அமுக்கக் குழுக்கள், பொதுஜன அபிப்பிராயம், வலுவேறாக்கம், அரசியல் யாப்புக்கள் போன்ற புதிய விடயங்களும், அவற்றைப் பற்றிய கற்கைகளும் அரசியல் விஞ்ஞானத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. சோசலிச, பாசிச அரசு முறை அரசிற்கும் அதிகாரத்திற்குமிடையிலான உறவு தொடர்பான புதிய விளக்கங்களை முன்னிலைப்படுத்தியிருந்தது. இதனால் இவ்விரு தத்துவங்களும் அரசியல் விஞ்ஞானத்திற்குள் உள்வாங்கப்பட்டது.
மேலும் அரசியல் கலாசாரம், சமூகமயப்படுத்தல், உயர் குழாம் அபிவிருத்தி, நவீனத்துவம், சர்வதேச அரசியல், பிராந்தியக் கற்கைகள் போன்ற விடயங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பற்றிய கற்கை அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லைக்குள் உள்வாங்கப்பட்டது. இவ் அரசுகள் பிரித்தானியாவின் தலைமையில் பொதுநலவாயத்தினை உருவாக்கிக் கொண்ட போது இதுவும் இப்பாடப்பரப்பிற்குள்ளடக்கப்பட்டது. மூன்றாம் உலக நாடுகள் அரசியல் ரீதியாக நவீனமடையாமலும், பொருளாதார ரீதியாக குறைவிருத்தியுடையதாகவும், சமூகரீதியாக பன்மைத்தன்மையுடையனவாகவும் இருந்ததனால் இவ் அரசுகளில் ஏற்படும் முரண்பாடுகளுக்கும், வன்முறைகளுக்கும் தீர்வுகாணுதல் என்பதும் முதன்மையடையலாயிற்று. இவ் அரசுகள் பின்பற்றிய தேசக் கட்டுமானம் தொடர்பான கொள்கைகள் தோல்வியில் முடிவடைந்ததால் பெரும்பாலான மூன்றாம் மண்டல நாடுகளில் இன மோதல்கள் உருவாகி உள்நாட்டு யுத்தங்களாக மாறியிருந்தன. இந்நிலை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காணப்படலாயிற்று. இதன் காரணமாக பொதுக் கொள்கை,பொது முகாமைத்துவம், அரசியல் வன்முறை, மோதல், மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்வு போன்ற புதிய விடயங்களும் அரசியல் விஞ்ஞானத்திகுள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
அரசியல் விஞ்ஞானம் இயங்கியல் பண்பு கொண்ட கற்கைநெறி என்றவகையில் காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்களையும், அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வருகின்றது. அரசிற்குள்ளும், சர்வதேச அரசியலிலும் நிகழும் எல்லா நிகழ்வுகளும் அரசியல் விஞ்ஞானத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. எதிர்காலத்தில் தேசிய அரசியலிலும் ப10கோள அரசியிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள் இன்னும் பல புதிய விடயங்களை அரசியல் விஞ்ஞானப் பாடப்பரப்பெல்லைக்குள் கொண்டு வந்து சேர்க்கும் எனலாம்.