மனிதன் எப்போது மற்றவர்களுடன் இணைந்து சமுதாயமாக வாழத்தொடங்கினானோ அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. மனிதன் ஏன் சமுதாயமாக சேர்ந்து வாழ விரும்புகின்றான். தன்னுடைய நன்மைக்காகத்தான். அவனுடைய சுயநலன் தான் பிறரை நாடத்தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வாழ்க்கை பாதுகாப்பாக நடாத்துவதற்கு அரசியல் வாழ்க்கையில் ஈடுபட வேண்டியது அவசியமாகின்றது. மனிதனையும், சமுதாய மனிதனையும், ஒருவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனுடைய அரசியல் வாழ்க்கையையும் வேறு வேறாகப் பிரிக்க முடியாது. அரசு ஒழுங்காக இயங்க வேண்டுமானால் அந்த அரசின் பிரஜைகள் அரசுக்காகச் செயற்பட வேண்டும். அவ்வாறே பிரஜைகள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் அரசு பிரஜைகளுக்காகச் செயற்பட வேண்டும். இத்தகைய பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம்தான் சமுதாய வாழ்க்கை சிறப்படையும். மேற்படி அரசும், பிரஜைகளும் பரஸ்பரம் ஒத்துழைக்காத போது சமுதாய வாழ்க்கை சீர்குலைந்து போகின்றது. அரசு பிரஜைகளின் நன்மைகளில் கவனம் செலுத்தாத போதும், பிரஜைகள் அரசின் செயற்பாட்டில் ஈடுபாடு காட்டாமல் வலுக்கட்டாயத்திற்காக ஆளப்படுகின்றபோதும் அரசுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் மோதல் உண்டாகின்றது. இந்த மோதலை இல்லாமற் செய்வதற்கு ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் அரசியல் விஞ்ஞான அறிவு அவசியமாகின்றது. ஆளுவோருக்குள்ள கடமையையும், ஆளப்படுவோருக்குள்ள உரிமையையும் வற்புறுத்திக்காட்டுவது அரசியல் விஞ்ஞானமாகும். மக்களையும், மக்களுடைய சொத்துக்களையும் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் கடமையாகும். மக்களைக்காப்பாற்றுவது என்பது மக்களுடைய சுதந்திரத்தையும், வாழ்க்கையையும் காப்பாற்றுவதாகும். அதாவது மக்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருப்பது அரசாங்கம். பாதுகாப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமானால் மக்கள் தங்கள் நலனை அடைவதும், அரசாங்கம் தனது கடமையைச் செய்வதும் இலகுவாக அமையும். அரசாங்கம் தன்பொறுப்பை உணர்ந்து செயற்படாமல் போனால் அதற்கு அதன் பொறுப்பை உணர்த்துவது மக்களின் கடமையாகும். இதற்கு மக்களுக்கு அரசியல் விஞ்ஞான அறிவு அவசியமாகும்.
அரசியல் விஞ்ஞான கற்கை நெறி பல்வேறு கல்வியியலாளர்களாலும், பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன. அரிஸ்டோட்டில் அரசியல் என்றும், வில்லியம் கோட்வின் அரசியல் விஞ்ஞானம் என்றும், ஆர்.ஜி.கெற்ரல் அரச விஞ்ஞானம் என்றும், சேர் பிறட்றிக் பொலொக் என்பவர் ஆட்சியியல் விஞ்ஞானம் என்றும் அழைத்தனர். எவ்வாறாயினும், மிக இலகுவாகக் கூறின் அரசறிவியல் கற்கையானது அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை எனலாம். ஆங்கிலப் பதமாகிய Politics கிரேக்க சொற்களாகிய நகர அரசு (Polis), அரசாங்கம்(Polity), அரசியல் யாப்பு (Politeia) ஆகிய மூன்று சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். கிரேக்க மொழியின் விளக்கத்தின்படி Politics என்பது நகர அரசுகள் அதன் நிர்வாகம் என்பன பற்றிய கற்கையாகும். ஆயினும், Politics என்ற பதத்தினைப் பயன்படுத்துவதிலுள்ள சிக்கல்களையும் அவதானிக்க வேண்டும். சொற்களஞ்சியம், பாடநூல் எழுத்தாளர்கள் இதனை விஞ்ஞானமாகவும், கலையாகவும் நோக்கியுள்ளனர். இதனை விட மேலும் சில சிக்கல்கள் கோட்பாட்டாளர்களால் அதிகரித்துள்ளன. கொப்ஸ் இதனை “அதிகாரத்துடனும்”, அகஸ்ட் காம்டே “நேர்காட்சிவாதம்” என்பதுடனும் தொடர்புபடுத்தியிருந்தனர். இன்று Politics என்ற பதத்திற்கான கிரேக்க மொழியிலான கருத்து வலுவிழந்துவிட்டது.
பொதுவாக அரசியல் என்பதை அரசு, அரசாங்கம் பற்றிய கற்கை என்றே விளங்கிக் கொள்ளப்படுகின்றது. ஆனாலும், முன்னணி எழுத்தாளர்களாகிய ஜெலினெக், வில்லோபி, பொலொக் போன்றவர்கள் கோட்பாட்டிற்கும், பிரயோகங்களுக்கும் இடையிலான தனிப்பண்புகளை வரையரை செய்வதில் குழப்பங்களை உருவாக்கியுள்ளார்கள். அரசியல் கோட்பாடுகள் அரசின் இலக்கு, நோக்கங்கள், இயல்புகள், தோற்றம் பற்றிய விடயங்களை கூறுகின்றது. பிரயோகமானது, அரசாங்கத்தின் நிர்வாக விடயங்களை எடுத்துக் கூறுகின்றது. இன்னோர் வகையில் கூறின், அரசியல் கோட்பாடுகள் அரசின் செயற்பாடு தவிர்ந்த அடிப்படை விடயங்களை குறித்து நிற்க, பிரயோகமானது, அரசின் செயற்பாட்டு விடயங்களை அல்லது, அரசு கருத்திலெடுக்கும் இயங்கியல் நிறுவனங்களைக் குறித்து நிற்கின்றது.
அரசு என்பது பல்கூட்டு விவகாரங்களைக் கொண்டதாகும். இதனால் இது வௌவேறுபட்ட கோணங்களில் கற்பிக்கப்படுகிறது. பொருளியியலாளர்கள், உளவியலாளர்கள், சமூகவியளாளர்கள், வரலாற்றாசிரியர்கள், சட்டவல்லுனர்கள் போன்றவர்கள் அரசு என்பதை தாம் சார்ந்த கற்கை நெறியூடாக நோக்குகின்றனர். அரசு தன்னுள் பல்வேறு வகைப்பட்ட பண்புக்கூறுகளைக் கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும். சமூக விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கூறுகளும் ஒவ்வொரு விடயங்களைக் கையாள்கிறது. இவ்வாறான நிலையில் டு சப்லன் (Du Sablon) வொன் மொல் (Von Mohl) லூயிஸ் (Lewis) போன்ற பிரான்ஸிய நாட்டு எழுத்தாளர்கள் அரசியல் விஞ்ஞானம் என்ற பதத்தை பயன்படுத்தலாம் என ஆலோசனை வழங்கியிருந்தனர். இவ் அடிப்படையில் நோக்கும் போது அரசியல் விஞ்ஞானக் கற்கை நெறி அரசுடன் தொடர்புடைய பல பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன எனலாம்.
இன்னோர் சிக்கல் இங்கு காணப்படுகின்றது. அதாவது, அரசியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய இரண்டு பதங்களினது வேறுபாடுகள், தனிப்பண்புகள் வேறுபடுத்திக்காட்டப்பட்டாலும், இவ்விரு பதங்களும் ஒன்றிற்குப் பிரதியீடாக மற்றொன்று மாற்றிப் பயன்படுத்தப்பட்டது. அரசியல் என்பது அரசின் பிரயோக விடயங்களைக் கூறுகின்றது. கார்ணர் இதனை பின்வருமாறு விளக்குகின்றார்.
“அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது. அல்லது பொதுவிவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடைய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரசியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, இராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட, அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது” எனக் கூறுகின்றார்.
அரசியல் விஞ்ஞானம் அரசின் தன்மை, அரசாங்கத்தின் இயல்பு, தனிப்பட்டவர்கள் அல்லது குழுக்கள் அரசோடு கொள்ளும் தொடர்புகள் என்பன பற்றியும் ஆராய்கின்றது. அரசியல் விஞ்ஞானம் தனியே அரசியல் ஸ்தாபனங்களை மட்டுமல்லாது அரசியல் சிந்தனைகளையும் அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் ஆராய்கிறது. மேலும் அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகள் பற்றி ஒப்பிட்டு ஆராய்வதோடு, நடைமுறையிலிருக்கும் அரசியல் ஸ்தாபனங்கள், சிந்தனைகள் என்பவற்றை விவரித்து, ஒப்பிட்டு, பாகுபடுத்தி விளக்கமளிக்கின்றது. மாறிவரும் சூழ்நிலை, ஒழுக்கநிலை என்பவற்றுக்கேற்ப அரசியல் சிந்தனைகள், அரசியல் ஸ்தாபனங்கள் என்பவற்றை வளர்க்கும் நோக்குடன் அரசு எவ்வாறு இருத்தல் வேண்டும் என்ற நோக்கில் இதன் எதிர்காலம் பற்றி எதிர்வு கூறுகின்றது.
அரசியல் விஞ்ஞானம் என்பது அரசின் கடந்தகாலம், சமகாலம், எதிர்காலம் பற்றியும், அரசியலமைப்பு, அரசியல் செயற்பாடுகள், அரசியல் ஸ்தாபனங்கள், அரசியல் கோட்பாடுகள், அரசியல் அதிகாரம், அரசியல் தீர்மானங்கள் பற்றிய கற்கை நெறியாகும். இது சமூகத்திலும், அரசிலும் மக்கள் தமக்குள்ள உரிமைகளையும், கடமைகளையும் உணர வைக்க உதவுவதுடன் நிருவாகிகள், அரசியல் தலைவர்கள் அல்லது உயர்ந்தோர் குழாமின் செயற்பாடுகளை அறியவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் உதவுகின்றது. மேலும் நீதித்துறை, நிருவாகம், சட்டத்துறை என்பன எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும், பொதுசன அபிப்பிராயம், வாக்களிப்பு, தேர்தல் தொகுதி நடத்தை, அரசியல் பங்குபற்றுதல் பற்றி அறியவும், ஆய்வு செய்யவும், தீர்மானங்கள் எடுத்தல், சமூகமயப்படுத்தல், தலைமைத்துவம், அரசியலில் பங்கு பற்றுதல் பற்றி ஒப்பீட்டு முறையில் கற்கவும் உதவுகின்றது. அரசியல் முறைகளையும், அரசாங்கங்களையும் ஒப்பீட்டுப் பார்த்து அவற்றின் சிறப்புகளையும், குறைபாடுகளையும் அறியவும், சர்வதேச அரசியல், நாடுகளிடையேயான தொடர்புகள், முரண்பாடுகள், வெளிநாட்டுக் கொள்கை, சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன பற்றி அறியவும், அரசியற் கோட்பாடுகளைக் கற்பதன் மூலம் எவ்வாறு நல்லதொரு அரசியற் சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பதை அறியவும் உதவுகின்றது. எனவே, அரசியல் விஞ்ஞானம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அரசுடன் தொடர்புடைய விடயங்களாகிய அரசின்; தோற்றம், இயல்பு, அரசியல் நிறுவனங்களின் வடிவம், இயல்பு, வரலாறு பற்றிய கற்கை நெறியாகும்.