புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரை அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் தொடர்பில் சிந்தனையாளர்களும்,கோட்பாட்டாளர்களும் கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். இவ்வகையில் அரிஸ்டோடில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், மொண்டெஸ்கியு, மில், மாக்ஸ், லூயிஸ், கொம்ரே, பிறைஸ், வெபர், பொலொக், வொஜ்லின், கால்பொப்பர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அணுகுமுறை என்பது ‘குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் சார்ந்த பார்வையும், விளக்கமும்’ எனப் பொதுவாகக் கூறலாம். அணுகுமுறையானது உள்@ர் பிராந்திய, தேசிய. சர்வதேச அரசியல் நிகழ்ச்சிகளை மிகவும் சிறியதாக்குவதாகலாம். அல்லது பரந்தளவிலான கருத்தினை அதாவது முழு உலகினையும் ஒரு பொருளாக்கி கூறுவதாகவும் இருக்கலாம். மறுபக்கத்தில் கல்விசார் நோக்கிலான கருதுகோள்களை ஆய்வு செய்வதற்காக திரட்டப்பட்டதும், தெரிவு செய்யப்பட்டதுமான தகவல்களை புலனாய்விற்குற்படுத்துவதாகவும் இருக்கலாம். எனவே அணுகுமுறை என்பது “அரசியல் யதார்த்த அறிவினை விசாரணை செய்வதற்கான மனித மனத்தின் மதிநுட்பமான தொழிற்பாடாகும்” எனக்கூறலாம். அரசியல் விஞ்ஞானத்தினை விளங்கிக் கொள்வதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பல அணுகுமுறைகள் உள்ளன. இவற்றில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுகுமுறைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்குகின்றனர். ஒன்று மரபு சார்ந்த அணுகுமுறை, இரண்;டாவது நவீன அணுகுமுறை ஆகும்.மரபுசார்ந்த அணுகுமுறையானது வரலாற்று விபரணமாகவும், சட்ட இயல்பு, பெறுமானம், இலக்கு என்பவைகளையும் கொண்டதாகும். இம் மரபுசார்ந்த அணுகுமுறையில் வேறுபட்ட பலவகையான அணுகுமுறைகள் காணப்படுகின்றன.
வரலாற்று அணுகுமுறை
கல்வியாளர்கள் வரலாற்றினை மரபுசார் பண்பினூடாகவே நோக்குகின்றனர். மனிதன் எவ்வாறு இருந்தான், எவ்வாறு கருத்தினை ஒழுங்கமைத்தான், எவ்வாறு தனது நலன்கள் யாவற்றையும் பெற்றுக் கொண்டான், அரசு எவ்வாறு தோன்றியது என்பன போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றன. அரசியல் பற்றிய கல்வியில் தனிமனிதனின் சிறந்த நடத்தை, உள்ளெண்ணங்கள் என்பன வரலாற்றில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தின என்பது ஆராயப்படுகின்றது. சமூகப் பொருளாதார முரண்பாடுகள் எவ்வாறு அரசியல் கோட்பாடுகளாயின, இம்முரண்பாடுகள் சிந்தனையாளர்களை எவ்வாறு பெரும் சிந்தனையாளர்களாக்கியது போன்ற விடயங்களும் வரலாற்றினூடாகவே உணரப்பட்டன. மாக்கியவல்லி, மொண்டெஸ்கியூ, செவிக்னி, மெயின், பிறிமன், லஸ்கி போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தமது ஆய்வுகளுக்கு வரலாற்று அணுகுமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள். கால்மாக்ஸ் முதலாளித்துவ சமுதாயம் வரலாற்றினூடாக தோற்றம் பெறுவதை விளக்குவதற்கு வரலாற்று அணுகுமுறையினையே பயன்படுத்தியிருந்தார். இதனை இவர் “வரலாற்றுப் பொருள் முதல்வாதம்” எனப் பெயரிட்டு அழைத்திருந்தார். சிஐ;விக் வரலாற்று அணுகுமுறை தொடர்பாக பின்வருமாறு கூறுகின்றார்.
“வரலாற்று அணுகுமுறை நிகழ்கால எதிர்காலத் தேவைகளைத் தீர்ப்பதற்குப் பங்களிப்புச் செய்யமாட்டாது. பதிலாக, சமூகத்தில் எவ்வகையான அரசியல் நிறுவனங்கள் இருந்தன, அதன் செயற்பாடுகள் எத்தகையதாக இருந்தன என்பன போன்ற அனுபவங்களையே வரலாறுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு சகாப்தத்திலும் அதற்கேயுரிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரச்சினைகளும் எந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தனவோ அதற்கு ஏற்பத் தீர்வுகளும் வேண்டப்பட்டன. வரலாறு என்பது நிகழ்ச்சிகளின் தொகுப்பாகவுள்ளதுடன், இந்நிகழ்ச்சிகள் நன்மையானவைகளா? அல்லது தீமையானவைகளா? என்பது கவனத்திலெடுக்கப்படுவதில்லை.” என்கின்றார்.
மெய்யியல் அணுகுமுறை
மெய்யியல் அணுகுமுறை அரசியல் விஞ்ஞானத்திற்கு மிகவும் பழமையானதாகும். இது அரசியல் விஞ்ஞானத்தில் நன்னெறிக் கோட்பாட்டு அணுகுமுறையாகவும் பயன்படுத்தப்பட்டது. மெய்யியலாளர்களின் கருத்துப்படி மனிதர்கள், அரசு, அரசாங்கம் என்பவைகள் எல்லாம் சில இலக்குகள், நன்னெறிகள், உண்மைகள் அல்லது உயர்தத்துவங்கள், யதார்த்தங்களுடன் இணைந்தவைகளாகும். மெய்யியல் என்பது சிந்தனை பற்றிய சிந்தனையாகும். மெய்யியல் ஆய்வு என்பது இலக்கு, இயல்பு பற்றிய வகைப்படுத்தப்பட்ட சிந்தனையாகும். மெய்யியல் ஆய்வின் இலக்கானது “விடயம்” தொடர்பான இலக்கு, கருத்துக்கள், தன்மைகள் போன்றவற்றை சிந்தனை ரீதியாக தெளிவுபடுத்துவதாகும். சிந்தனை வெளிப்பாடு, சிந்தனை வெளிப்படுத்தல் போன்றவற்றின் செல்வாக்கிற்குள் மெய்யியல் ஆய்வாளர்கள் உட்படுகின்றார்கள். இதனால் மெய்யியல் சிந்தனையாளர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசியல் சமுதாயத்திற்கும் சில உயர்ந்த இலட்சியங்களை வழங்கியுள்ளார்கள். மெய்யியல் அணுகுமுறைப் பகுப்பாய்வுகள் விதிவருமுறை அல்லது உய்த்தறிமுறை, தொகுத்தறிமுறை அல்லது விதிவிலக்கு முறைகளுடன் தொடர்புபட்டதாகும். உய்த்தறிமுறைகள் அவதானம் அல்லது ஒப்பீடு, பரிசோதனை அல்லது குறிப்பிட்ட நிகழ்ச்சியின் வரலாற்றுப் பண்புகள் போன்ற சில விடயங்களுடாக அரசியல் நிகழ்ச்சி தொடர்பான முடிவுகளுக்கு வருவதற்கு உதவுகின்றன. மறுபக்கத்தில் மெய்யியல் அணுகுமுறை தொகுத்தறிமுறை அல்லது விதிவிலக்கு முறையுடனும் தொடர்புபட்டதாகும். விதிவிலக்கு முறையானது, உண்மை என ஊகிக்கப்பட்ட அல்லது உணரப்பட்ட ஆய்வுப் பொருள் அல்லது பல பொதுவான கொள்கைகளிலிருந்து புதிய முடிவினை விருத்தி செய்வதனைக் குறிக்கின்றது. பிளேட்டோ, தோமஸ் மோர், ஹரிங்டன், ரூசோ, கான்ட், ஹெகல், பிறட்லி, சிஐ;விக் போன்ற சிந்தனையாளர்கள் தொகுத்தறிமுறையினைப் பயன்படுத்தி அரசியல் விஞ்ஞானத்தினை ஆராய்ந்துள்ளனர். அரசியல் விஞ்ஞானத்தில் மனித இயல்பு பற்றிய மூல எண்ணங்களிலிருந்தும் அரசின் இயல்பு, இலக்கு, பகுதிகள், எதிர்காலம் பற்றிய எண்ணங்களிலிருந்தும் தொகுத்தறிமுறையிலான புலனாய்வு ஆரம்பமாகின்றது. அண்மைக்காலத்தில் அரசியல் விஞ்ஞானிகளுக்கும், அரசியல் மெய்யியலாளர்களுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் கண்டுணரப்பட்டுள்ளது. அரசியல் விஞ்ஞான மாணவர்கள் எல்லோரும் இன்று அறிவின் உண்மைத் தன்மைகளைத் தேடும் விசாரணைகளை மேற்கொள்வதில்லை. சிலர் நன்னெறி அறிவுக்கான ஆராய்ச்சிகளைச் செய்கின்றனர். இதேபோன்று அரசியல் மெய்யியலாளர்களும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள், அரசாங்கம் எவ்வாறு நடந்து கொள்கின்றது, மக்களும், அரசாங்கமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு;ம் என்பவைகள் தொடர்பாக அக்கறைப்படுவதில்லை. அரசியல் விஞ்ஞானிகள் அரசியல் யதார்த்தத்தைக் கற்பதுடன், வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சிகள், அரசியல் நிறுவனங்களின் தொழிற்பாடுகளுக்கு விளக்கமளிக்க முயற்சிக்கின்றார்கள். அரசியல் மெய்யியலாளர்கள் எண்ணங்களைக் கற்பதுடன் அதனை வெளிப்படுத்திக்காட்ட முயற்சிப்பதுடன் அதற்குரிய அங்கீகாரத்தினையும் தேடுகின்றனர்.
நிறுவன அணுகுமுறை
அரசியல் விஞ்ஞான மாணவர்கள் அரசியல் ஒழுங்கமைப்பில் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களைக் கற்பதற்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள். சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவைகளே இந்நிறுவனங்களாகும். இவ் அணுகுமுறையினை அதிகமான அரசியல் விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளார்கள். புராதன காலத்தில் அரிஸ்டோட்டில், பொலிபியஸ் போன்றவர்களும், நவீன காலத்தில் பிரைஸ், ப்பைனர் போன்றவர்களும் இவ் அணுகுமுறையினைப் பயன்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும் நவீன எழுத்தாளர்கள் மேற்கூறப்பட்ட மூன்று நிறுவனங்களுடன் நான்காவதாக அரசியல் கட்சிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறுகின்ற அதேநேரம், சமகால எழுத்தாளர்களாகிய பென்லி ரூமன், லேதம், வீ.ஓ.கீ போன்றவர்கள் மேலும் ஒருபடி மேலே சென்று அரசியல் நிறுவனங்களுக்குள் அமுக்கக் குழுக்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனக்கூறுகின்றார்கள். இவர்கள் நிறுவன அணுகுமுறையினை அமைப்பு அணுகுமுறை என அழைக்கலாம் எனவும் வாதிடுகின்றனர். நிறுவன ரீதியான அணுகுமுறையினைப் பயன்படுத்தி எவ்.ஏ.ஒஎக், ஹெமன், ப்பைனர், எச்.ஜே.லஸ்கி, சி.எவ்.ஸ்ரோங் போன்ற ஆங்கில, அமெரிக்க ஆய்வாளர்கள் ஆய்வு நடாத்தியுள்ளார்கள். அரசியல் முறைமையில் உள்ள முறைசார்ந்த, முறைசாராத நிறுவனங்கள் பற்றிய கல்வியாக அரசியல் விஞ்ஞானம் உள்ளதாக இவர்களுடைய ஆய்வுகள் கூறுகின்றன.
சட்ட அணுகுமுறை
மரபுரீதியான அணுகுமுறைகளில் இறுதியாகச் சட்ட அணுகுமுறையினைக் கவனத்தில் கொள்ளமுடியும். அரசியல் என்பது சட்ட நடைமுறை, சட்ட நிறுவனங்கள் என்பவற்றினால் கலந்ததொன்றாகும் என சட்ட அணுகுமுறையாளர்கள் கூறுகின்றார்கள். அரசியல் விஞ்ஞானிகள் சட்டம், நீதி என்பவைகளை சட்ட இயலாக நோக்குவதில்லை பதிலாக, அரசைப் பராமரிப்பதற்கான சட்டம், ஒழுங்கு என்பவற்றின் அடிப்படையிலேயே நோக்குகின்றனர். மேலும் இவர்கள் நீதி நிறுவனங்களின் அதிகார எல்லை, அவற்றின் சுதந்திரம் என்பவற்றிலும் இவர்கள் கவனம் செலுத்துகின்றார்கள். புராதன காலத்தில் சட்ட ஆய்வாளராகிய சிசிரோவிலிருந்து நவீன காலத்தின் சட்ட ஆய்வாளராகிய டைசி வரை சட்டத்தினை அரசுடன் இவ்வாறே தொடர்புபடுத்தியுள்ளனர். இவர்களை விட ஜீன்போடின், கியுகோ குரோசியஸ், தோமஸ் ஹொப்ஸ் போன்ற சி;ந்தனையாளர்களும் சட்ட அணுகுமுறைக்கூடாக அரசியல் விஞ்ஞானத்திற்கு விளக்கமளித்துள்ளனர். ஹொப்ஸின் நோக்கில் “அரசின் தலைமையானது உயர் சட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அதன் கட்டளை சட்டமாகின்றது. அதற்கு கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படியாதோர் தண்டிக்கப்படல் வேண்டும்” பென்தம், யோன் ஒஸ்ரின், சேர் ஹென்றி மெயின், எ.வி.டைசி போன்றவர்களும் இந்நோக்கிலேயே கருத்துக் கூறியுள்ளனர். அரசியல் பற்றிய கல்வியானது “சட்ட நடைமுறைகளுடன் இரண்டறக் கலந்ததொன்றாகும்” என்பதே இவர்களது முடிவாகும்.
நவீன அணுகு முறை மரபுசார் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதாகும். மரபுசார்அணுகுமுறையில் பெருமளவிற்கு விபரணமே காணப்படுகின்றது. இதற்கு சட்டம் ஓழுங்கு,நீதி,சமயம்,வரலாறு,பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நவீன அணுகுமுறைக்குத் தரவுகள் அவசியமாகும். இத்தரவுகளைப் பயன்படுத்தி புலனாய்வு செய்யப்படவேண்டும். இப்புலனாய்வு அனுபவப் புலனாய்வாக இருத்தல் அவசியமாகும். அப்போதுதான் ஆய்வினூடான உண்மை கண்டறியப்படும். இதில் பலவகையான அணுகுமுறைகள் காணப்படுகின்றன.
புள்ளிவிபர அணுகுமுறை:-
புள்ளிவிபர ரீதியாக அரசியல் விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விஞ்ஞானரீதியாக அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வினை முன்வைப்பதே இவ் அணுகுமுறையி;ன் நோக்கமாகும். அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் புள்ளிவிபர ரீதியாக கணிப்பிடப்படுகின்றன. அதன் அடிப்படையில் அந்நிகழ்ச்சி தொடர்பான எதிர்வு கூறல்களும், முடிவுகளும் முன்வைக்கப்படுகின்றன. இவ் அணுகுமுறையினை தேர்தல் நடத்தை, அரசியல் கட்சிகள், பொதுசன அபிப்பிராயம் போன்ற ஆய்வுகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள். கலுப், சாள்ஸ்மெரியம், ஹெரோல்ட் கொஸ்நெல் போன்ற அமெரிக்க அறிஞர்கள் மக்களின் தேர்தல் நடத்தைகளை கணிப்பதற்கு பெருமளவிற்கு இவ் அணுகுமுறையினைப் பயன்படுத்தியிருந்தனர். புள்ளிவிபர அணுகுமுறை ஒப்பீட்டு அரசாங்கம், சர்வதேச உறவுகள் தொடர்பாகக் கற்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. டேவிட் தோம்சன் “சர்வதேச உறவில் புள்ளிவிபரவியல் மற்றும் சமூகவியல் நுட்பங்களைப் பிரயோகிக்கும் வரை இக் கற்கையின் விஞ்ஞானப் பண்பு மேலும் முன்னேற்றமடையும்” எனக் கூறுகின்றார்.
அவதான அணுகுமுறை:-
அவதான ஆய்வு முறை அனுபவத்தால் அறியப்பெறுகிற ஒரு கல்வி முறையாகும். ஜேம்ஸ் பிரைஸ் இவ் அணுகுமுறையின் ஆதரவாளராகும். குறிப்பிட்ட இடத்திலுள்ள பிரச்சினைகள், நிறுவனங்களின் செயற்பாடுகளை புலன் விசாரணை செய்து கற்பதற்கும், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும் இவர் அதிக முக்கியத்துவம் வழங்கியிருந்தார். இவர் ஐக்கிய அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, அவுஸ்ரேலியா, நிய10சிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று இந்நாடுகளையும், மக்;களையும் கற்றதுடன், இந்நாடுகளில் செயற்படும் நிறுவனங்களை மிகவும் நெருக்கமாக இருந்து அவதானித்து தனது சொந்த முடிவுகளை உருவாக்கியிருந்தார்.
“தரவுகளிலிருந்து உண்மையானதும் சரியானதுமான அறிவினைப் பெறுவதற்கு நடைமுறை அரசியலையும் ஒருங்கிணைக்க வேண்டும். பிரான்ஸ் அல்லது ஐக்கிய அமெரிக்கா நாட்டிலுள்ள திறன்வாய்ந்த மனிதனொருவன் புத்தகங்க@டாக பெறுகின்ற அறிவை விட பன்னிரெண்டு வருடங்களில் பிரபல்யமான அரசாங்கங்களின் யதார்த்தத்தினை அனுபவத்தாலும் திறமையினாலும் பெற்று விடுகின்றான்.” எனக் கூறுகின்றார்.
அரசியல் ஆய்வாளராகிய ஜேம்ஸ் பிரைஸ் ஒரு தனி அரசினை மட்டும் அவதானித்து இம்முடிவினை உறுதிப்படுத்தவில்லை. அவருடைய கள புலனாய்வுகள் எல்லா நாடுகளினதும் மக்களின் அரசியல் பழக்கங்கள், இயல்பான மனப்பாங்குகள் தவிர்ந்த அரசியல் நிகழ்ச்சிகள், ஒவ்வொரு இடத்திலுமுள்ள மனிதனின் அடிப்படை இயல்புகள் உள்ளடங்கிய பரந்த ஆய்வாக இருந்தது. இவரின் கருத்துப்படி தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் அவைகள் உண்மையான தரவுகளா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே அரசியல் நிகழ்ச்சி தொடர்பான கற்கைக்கு நேரடி அவதானம் முக்கியமானதாகும். செயிற் என்பவர், “அரசியலில் விஞ்ஞானத் தன்மையினை அவதானத்தினூடாகவே அபிவிருத்தி செய்ய முடியும். அவதானம் பெருமுயற்சியுள்ளதும், பரிசோதனையை விட திறந்த தன்மையுடையதுமாகும்” எனக் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பீட்டு அணுகுமுறை
ஒப்பீட்டு அணுகுமுறை அரிஸ்டோட்டில் காலத்திலிருந்து அரசியல் விஞ்ஞானத்தில் ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அரிஸ்டோட்டில் 158 அரசியல் யாப்புக்களை கற்று பின்னர் அவைகளை ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்து சில விளக்கங்களையும், முடிவுகளையும் கொடுத்திருந்தார். நவீன காலத்தில் ஒப்பீட்டு அணுகுமுறையானது மொண்டஸ்கிய10ää டி ரக்கிய10வில், பிரைஸ் போன்றவர்களால் பயன்படுத்தப்பட்டது. அண்மைக்காலத்தில் ஒப்பீடு என்பது மிகவும் காத்திரமான கலந்துரையாடலாகிவிட்டது. 1944ஆம் ஆண்டு ‘ஒப்பீட்டு அரசாங்கம் பற்றிய கற்கைக்கான அறிக்கை’ ஆய்வுக் குழுவினால் பிரசுரிக்கப்பட்டது. யுனெஸ்கோ சமகால அரசியல் விஞ்ஞானம் என்னும் கையேட்டினை பிரசுரித்திருந்தது. 1952 ஆம் ஆண்டு சர்வதேச அரசியல் விஞ்ஞானக் கழகத்தினால் அரசியல் விஞ்ஞானத்திற்கான கற்பித்தல்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. ஓப்பீட்டினூடாகப் பொதுமுடிவுக்கு வருவதை இவ்வணுகுமுறை குறித்து நிற்கின்றது. வேறுபட்ட அரசியல் எண்ணங்கள், அரசியல் நிறுவனங்கள், அரசியல் முறைமைகள் போன்றவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்ததன் பின்னர் சில முடிவுகளுக்கு அரசியல் விஞ்ஞானிகள் வருகின்றனர். இவ்வாறு ஒப்பீடு செய்யப்படும்போது இவைகளுக்கிடையிலான ஒத்ததன்மைகள், வேற்றுமைகள் குறிப்பிட்ட சூழலில், நிபந்தனைகளில் எவ்வாறிருந்தன என்பது கண்டுணரப்படுகின்றன. ப்பைனர், சி.எவ்.ஸ்ரோங், கே.சி.வேயர் போன்றவர்கள் வேறுபட்ட அரசியல் நிறுவனங்களை கற்பதற்கு ஒப்பீட்டு முறையானது விஞ்ஞானப10ர்வமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லாவிட்டாலும், ஒப்பீடு செய்யும் போது சில சந்தர்ப்பங்களில் தவறுகள் நிகழ்ந்து விடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. எனவே ஒப்பீடு செய்யும் போது வலுவான முடிவுகளுக்கு வருவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறுகின்றார்கள்.
நடத்தைவாத அணுகுமுறை:-
அரசியல் விஞ்ஞானத்தில் நடத்தைவாதம் மிகவும் முக்கியமான அணுகுமுறையாகக் கருதப்படுகின்றது. ஆரம்பகாலத்திலிருந்தது போல அரசியல் நிறுவனங்களையோ, அவற்றின் வரலாற்று அபிவிருத்திகளையோ ஆய்வு செய்யாமல், அரசியலில் பங்கு கொள்ளுகின்ற மனித நடத்தைகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதியில் வலுப்பெறலாயிற்று. 1908ஆம் ஆண்டு கிரஹம்வொலாஸினால் வெளியிடப்பட்ட “அரசியலில் மனித இயற்கையாற்றல்” என்ற நூலிலும், அமெரிக்க அறிஞரான ஆதர்.எப்.பென்லியினுடைய “அரசாங்கத்தின் செயற்பாங்கு” எனும் நூலிலும், மனித நடத்தை பற்றிய ஆய்வு அரசியல் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன், லாஸ்வெல் என்பவரும் இவ் அணுகுமுறை வளர்வதற்குப் பங்களிப்புச் செய்திருந்தார். நடத்தைவாத அணுகுமுறை மரபுரீதியானதும், நிறுவனரீதியானதுமான அணுகுமுறைகளை நிராகரிக்கின்றது. ஐக்கிய அமெரிக்க அரசியல் விஞ்ஞானச் சங்கத்தின் பிரதம நிர்வாகி ‘கிர்;க் பற்றிக்’ நடத்தைவாதம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“இரண்டாம் உலக யுத்தத்திற்கும், 1950களின் நடுப்பகுதிக்குமிடையில் நடத்தைவாதம் ஆராய்ச்சிகளையும், சவால்களையும் எதிர்நோக்கியது. இதனால் நடத்தைவாதம் தொடர்பான விவாதங்கள், இயக்கங்கள், தீர்மானங்கள் என்பன இக்காலத்தில் முக்கியம் பெறலாயிற்று.” எனக் கூறுகின்றார்.
நடத்தைவாத அணுகுமுறையின் முக்கிய இயல்புகளைப் பின்வருமாறு வரையறுக்கலாம். சித்தாந்தங்கள், நிறுவனங்கள், அமைப்புக்கள், நிகழ்வுகள், என்பவைகளைக் கற்பதை விட சமூகக்குழுக்கள், தனிநபர்களின் நடத்தைகளைக் கோட்பாட்டுரீதியாகவும், அனுபவ ஆய்வாகவும் கற்பது இதன் நோக்கமாகும். இது சமூக உளவியல், சமூகவியல், கலாசார மானிடவியல் போன்றவற்றினூடாகக் கோட்பாடுகளையும், ஆராட்சிகளையும் மேற்கொள்ள முயலுகின்றது. கோட்பாட்டிற்கும் ஆராய்ச்சிக்குமிடையிலான பரஸ்பர உறவினை இது முக்கியத்துவப்படுத்துகின்றது.
முறைமைப்பகுப்பாய்வுமுறை:-
பொது முறைமைப் பகுப்பாய்வு இயற்கை விஞ்ஞானத்தில் இருந்து பெறப்பட்டதொரு அணுகுமுறையாகும். குறிப்பாக உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்டதாகும். உயிரியல் விஞ்ஞானியாகிய லுட்விங் வொன் பர்ரலன்பி (Ludwing Von Bertallanfy) என்பவர் 1920 களில் பொது முறைமைப் பகுப்பாய்வு தொடர்பாக எழுதியிருந்தார். ஆயினும் இவரின் அணுகுமுறையானது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே இப் பகுப்பாய்வு முதன்மைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர். விஞ்ஞானிகளின் ஐக்கியத்திற்கான தேவையினை பல்வேறு துறை சார்ந்த கல்வியியலாளர்கள் எடுத்துக் கூறியிருந்தனர். அத்துடன் கல்வித் துறைகள் மிகவும் இறுக்கமாகவும், தனித்தும் இயங்குவதை இவர்கள் கண்டனம் செய்திருந்தார்கள். இதனால் பொது முறைமைப் பகுப்பாய்வு பிரபல்யமடையத் தொடங்கியதுடன், எல்லோரது கவனத்தையும் ஈர்த்து அதன் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான அடிப்படையினை உருவாக்கியது. அத்துடன் 1956 ஆம் ஆண்டு பொது முறைமைப் பகுப்பாய்வு தொடர்பான வருடாந்த நூலும் வெளியிடப்பட்டது.
சமூக விஞ்ஞானத்தில்; பொது முறைமைப் பகுப்பாய்வினை ஐக்கிய அமெரிக்க கல்வியியலாளர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர். சமூக விஞ்ஞானத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையினை விமர்சனம் செய்யும் இக்கல்வியியலாளர்கள் இக் கற்கை நெறிக்குள் உள்ள நெருக்கமான தன்மையினை எடுத்துக்காட்டினர். ஆயினும், சமூக விஞ்ஞானத்திற்கு பொது முறைமைப் பகுப்பாய்வானது மானிடவியல் ஊடாகவே கொண்டுவரப்பட்டது. மானிடவியலிலிருந்து சமூகவியல், உளவியல், அரசியல் விஞஞானக்; கற்கை நெறிகளுக்கு பொது முறைமைப் பகுப்பாய்வு கொண்டு வரப்பட்டது. இன்னோர் வகையில் கூறின் எமில் டுர்கைம் (Emile Durkheim), ஏ.ஆர். ரெட்கிளிப் பிறவுண் (A.R Radcliffe Brown) போன்ற மானிடவியலாளர்களின் பங்களிப்பினால் சமூக விஞ்ஞானத்திற்குள் பொது முறைமைப் பகுப்பாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 1953 ஆம் ஆண்டு எமில் டுர்கைம் இப் பகுப்பாய்வு முறையினை சமூகவியல், மெய்யியல் கற்கை நெறிக்குள் அறிமுகப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டில் பிறவுண் புராதன சமுதாயத்தின் அமைப்பு, தொழிற்பாட்டு முறையினை இப்பகுப்பாய்வு முறைக்கூடாக விளக்கினார். 1960களின் மத்திய காலப்பகுதியில் அரசறிவியலாளர்களாகிய டேவிட் ஈஸ்ரன் (David Easton),கப்ரியல் ஆமன்ட் (Gabriel Almond), மோர்டன் கப்லான் (Morton Kaplan) போன்றவர்கள் இப்பதத்தினைப் பயன்படுத்தவும், இதனூடாகச் சிந்திக்கவும் தொடங்கினார்கள். இவ் அரசியல்விஞ்ஞானிகள்; அமைப்பு-தொழிற்பாடு, உள்ளீடு-வெளியீடு (input-out put) போன்றவற்றை பொது முறைமைப் பகுப்பாய்வு ஊடாகவே விளக்க முற்பட்டனர்.
பொது முறைமை என்ற சொற்பதத்திலுள்ள முறைமை என்ற பதத்திற்கு பல்வேறுபட்ட எழுத்தாளர்களும் தாம் சார்ந்த துறைகளுக்கு ஏற்ப விளக்கமளித்துள்ளனர். இதனால் முறைமை என்ற சொற்பதத்திற்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவிலக்கணம் ஒன்றை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. லுட்விக் வொன் பர்ரலன்பி என்ற உயிரியல் விஞ்ஞானியின் கருத்துப்படி முறைமை (System) என்பது “மூலக்கூற்றுத் தொகுதிகளிற்கிடையிலான (Set of Elements) உட் தொடர்பாகும்” என்கிறார். ஏ.ஹொல், (A.Hall), ஆர்.வ்பேகன் (R.Fagan) ஆகியோர்களுடைய கருத்துப்படி முறைமை என்பது “நோக்கங்களின் தொகுதிகளும் (Set of Objects) அவற்றிற்கிடையிலான உறவுமாகும்” என்கிறார். வர்மா (Varma) என்பவரின் கருத்துப்படி முறைமை என்பது “நோக்கங்களின் தொகுதிகளிலுள்ள அமைப்பு ரீதியான இயல்புகளுக்கிடையிலுள்ள உறவு ஆகும்” என்கிறார். இங்கு எல்லா வரைவிலக்கணங்களும் ஒன்றிலிருநது ஒன்று வேறுபடுவதை அவதானிக்க முடியும். பொது முறைமைப் பகுப்பாய்விற்கும் முறைமைப் பகுப்பாய்விற்கும் இடையில் அடிப்படை வேறுபாடுள்ளது. சில நேரங்களில் இரண்டு பதங்களையும் ஒன்றிற்காக மற்றொன்று பயன்படுத்தப்பட்டு விடுகின்றது. ஆகவே இரண்டு பதங்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை விளங்கிக் கொள்வது அவசியமாகும். பொது முறைமைப் பகுப்பாய்வு எல்லா முறைமைக்கும் பொதுவாக பிரயோகிக்க கூடியதாகும். மறுபக்கத்தில் பகுப்பாய்வானது அரசியல் முறைமைக்;கு மாத்திரமே பிரயோகிக்கக் கூடியதாகும். ஆகவே முறைமைப் பகுப்பாய்வு என்பது அரசியல் முறைமைக்குச் சமனானதாகும்.
முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறையின் வளர்ச்சிக்கு டேவிட் ஈஸ்ரன், கப்ரியல் ஆமன்ட் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர். அதேநேரம் டல்கட் பாசன் என்பவரது சிந்தனைகளும் கூடியளவிற்கு இவ் அணுகுமுறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளன. முறைமை பகுப்பாய்வு உயிரியல் விஞ்ஞானத்திலிருந்து வந்தமையால் அரசியல் விஞ்ஞானத்தினை மேலும் விஞ்ஞானப் பண்பு கொண்ட கற்கைநெறியாக மாற்றியுள்ளது. முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை அரசியல் விஞ்ஞானத்தில் மனித நடத்தை பற்றி ஆய்வு செய்வதற்கும் பெரிதும் உதவுகின்றது. 1957 ஆம் ஆண்;டு ஈஸ்ரன் வெளியிட்ட “அரசியல் முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை” என்ற கட்டுரையில் இது தொடர்பாக விவாதிக்கின்றார். 1965 ஆம் ஆண்டு இவர் ‘அரசியல் முறைமைப் பகுப்பாய்வு’ என்னும் நூலை எழுதியிருந்தார். சமூகம்; ஒரு முறைமை என இவர் கூறுகின்றார். சமூக இயக்கத்தைச் சில விதிகள், நெறிகள் இயக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் சமூகம் ஓர் முறைப்படுத்தப்பட்ட நிறுவனம் எனவும் அச் சமூகம் தனக்கென வகுத்துக் கொடுக்கப்பட்ட முறைக்கேற்பவே இயங்குகின்றது எனவும் கூறப்படுகின்றது. இச் சமூக முறைமையானது வௌ;வேறு இயல்பு, தன்மை, கொண்டு இயங்குகின்றது. ஈஸ்ரன் தனது நூலில் முறைமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் உள்ள தொடர்பினை முதன்மைப்படுத்துகின்றார். மேலும் இவர் அரசியலுக்கும் ஏனைய சமூக வாழ்க்கைக்கும் இடையிலான உறவினைத் தெளிவுபடுத்துவதிலும் முறைமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் தன்மையினைத் தெளிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றார். இவரின் கருத்துப்படி ஒவ்வொரு சமூக அமைப்பிலும் வேறுபட்ட பகுதிகள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வேறுபட்ட இயல்புகளும், செயற்பாடுகளும் கொண்டவைகளாகும். இவை யாவும் ஒருங்கிணைந்து செயற்படுவதும், அமைப்புரீதியாக இவை ஒவ்வொன்றும் தமக்கிடையே உறவுகளை வளர்ப்பதும் அவசியம் என்கின்றார். ஒவ்வொரு கற்கை நெறியும் பொது முறைமைக்குள் இருக்கின்ற உப முறைமை போன்றே இயங்குகின்றன. எல்லா இயற்கை விஞ்ஞானங்களும் பௌதீகவியல், இரசாயனவியல், போன்ற உப முறைமைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு உப முறைமையும் ஒவ்வொரு தனி ஒழுங்குமுறையாகும். இவை தமக்கென்று தனித்துவத்தையும் கொண்டிருக்கின்றன. இவ்வாறே அரசியல் விஞ்ஞானம், பொருளியல், உளவியல் போன்ற எல்லா உப முறைமைகளும் சமூக ஒழுங்குமுறையினுள் உள்ளடக்கப்படுகின்றன. எனவே இப்புதிய உப முறைமைகளைக் குறிப்பதற்கு புதிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அரசியல் முறைமை, பொருளாதார முறைமை, உளவியல் முறைமை என்பவற்றைக் கூறிக்கொள்ளலாம்.
சமூகவியல் அணுகுமுறை
சமூகவியல் அடிப்படையில் ஒப்பீட்டரசியலை விளங்கிக் கொள்ளல் என்பதுதான் இவ்வணுகுமுறையினுடைய பிரதான நோக்கமாகும். மக்ஐவர் (Mac Iver), டேவிட் ஈஸ்ரன் (David Easton), ஐி. ஏ ஆமன்ட் (G.A.Almond) போன்ற முன்னோடி ஆய்வாளர்கள் இவ் அணுகுமுறையினை தமது அரசியல் நடத்தை பற்றிய ஆய்விற்காக பயன்படுத்தியுள்ளார்கள். இவர்களை விட வெபர் (Weber), கொம்ரே (Comte), ஸ்பென்ஸ்ஸர் (Spencer) போன்ற சமூகவியலாளர்கள் கருத்தில் “அரசு” என்ற நிறுவனம் ஒரு அரசியல் நிறுவனம் என்பதை விட இதுவொரு சமூக நிறுவனம் என்பதுதான் பொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். இவர்களது கருத்தில் தனிப்பட்டவர்களின் அரசியல் நடத்தைகளை விளங்கிக் கொள்வதற்கு அல்லது விளங்க வைப்பதற்கு சமூகம் பற்றிய தெளிவு அவசியம் எனக் கூறுகின்றனர். சூழலின் தாக்கம் என்பது வௌ;வேறுபட்ட நடத்தையைக் காட்டுகின்றது. ஆகவே ஒரு அரசியல் நடத்தையை விளங்கிக் கொள்வதற்கு இத்தனிப்பட்டவர்கள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
சமூக அமைப்பைப் பொறுத்தவரையில் தனிப்பட்டவர்கள் தமது நடத்தைகளை வெளிப்படுத்துவதுடன், குழுக்களாகவும் இணைந்தே தமது நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். எனவே இங்கு சமூகமைப்பில் ஏதோவோர் வகையில் தன்னை வெளிப்படுத்தும் தன்மை காணப்படுகின்றது. இவர்கள் ஒவ்வொருவரும் சமூக செயற்பாட்டில் பங்குபற்றுகின்றார்கள். இதன் மூலம் தமக்குரிய அந்தஸ்தையும் தீர்மானிக்கின்றனர்.எனவே சமூக இயங்கு முறையில் பங்கு பற்றுதல் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய சிற்சில தனிப் பண்புகள் எனலாம். இத்தனிப் பண்புகள் ஒரு சந்ததியிடமிருந்து மறு சந்ததிக்கு தொடர்ந்தேச்சியாக கடத்தப்படுகின்றன. இத்தகைய பண்புகள் நீடித்துக் கொண்டு செல்வதனால் இதனையே சமூகமயமாக்கம் (Socialization) என அழைக்கின்றனர்.
மேலும் சமூகவியல் அணுகுமுறையில் காணப்படும் மற்றமொரு பண்பு அரசியல் கலாசாரம் என்பதாகும். அதாவது அரசியல் கலாசாரத்தினூடாக அரசை அணுகும் பண்பு காணப்படுகின்றது. அரசியல் கலாசாரம் என்பது அரச சமுதாயத்தில் தனிநபர்களினால் என்ன படிப்பினைகள் பெறப்பட்டது என்பதும், அரசியல் சமூகத்தின் வாழ்க்கை முறை என்ன, சிந்தனை முறை என்ன, செயற்பாடுகள், உணர்வுகள் எத்தகையது போன்ற விடயங்கள் அனைத்தையும் வெளிப்படுத்திக் காட்டுவதே அரசியற் கலாசாரமாகும். எனவே இதனூடாக சமூகவியல் அணுகுமுறைமையில் அரசை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
உளவியல் அணுகுமுறை
அரசறிவியலில் உளவியல் என்பது மிகவும் நெருக்கமானதாக காணப்படுகின்றது. மெரியம் (Marriam), லாஸ்வெல் (Lass Well), கிரஹாம் வொலாஸ் (Graham Wallas), ஆர். ஏ. டால் (R.A.Dhal) போன்ற சமூகவியலாளர்கள் அரசை விளங்கி;க்கொள்ள உளவியலைப் பயன்படுத்தும் சிந்தனையாளர்களாக காணப்படுகின்றனர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாக்கியவல்லி, பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கொப்ஸ் போன்றோர் தாம் வாழ்ந்த காலச் சூழிநிலையில் கொடுக்கப்பட்ட விளக்கங்கள், மனித, சமூக, சொத்து போன்றவற்றிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமாயின், “பலம்” என்பது அவசியமாக இருக்க வேண்டும் என்கின்றனர். இங்கு “பலம்” என்பது உளம் சார்ந்த எண்ணக்கருவாகும். உளவியல் ரீதியான பலத்துடன் இருப்பவனே ஆளத்தகுதியானவன் எனக் கூறப்படுகின்றது. “இளவரசன் நரி போன்ற தந்திரமுடையவனாகவும், சிங்கத்தைப் போன்ற பலமுள்ளவனாகவும் இருக்க வேண்டும்” என்ற மாக்கியவல்லியின் கருத்தைக் குறிப்பிடலாம். இவ் எண்ணக்கரு வளர்ச்சியடைந்துää அரசை விளங்கிக் கொள்ள உளவியல் அடிப்படையானது என்ற கருத்து சமூகவிஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூகத்தில் தனிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள் மன எழுச்சிகள் இருக்கின்றன. இவை யாவும் உளம் சார்ந்தவையாகும். எனவே இங்கு அரசு சார்ந்த விடயங்களில் இச்சமூகம் ஈடுபடுகின்றது. இவ்வாறு இயங்கும் போது மன உணர்ச்சிகள், எழுச்சிகள் யாவும் வெளிப்படுத்தப்படும் இவையே அரசியற் செயற்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது.
தனிமனிதனுக்குரிய “ஆளுமை” என்பது சமூகத்தில் பிரதிபலித்து பின் அது அரசிலும் பிரதிபலிக்கின்றது. இங்கு அதிகாரம் என்பதும் ஒரு உளவியல் விடயமாகும். அதிகாரம் என்பது ஒரு சமூக மனப்பாங்காகும். இங்கு அதிகாரத்தை அனுபவித்தல் அல்லது செயற்படுத்தல் என்பது சமூகம் தொடர்பான விடயமாகவே காணப்படும். “அதிகாரம் பற்றிய எண்ணக் கருவே அரசியல் விஞ்ஞானம்;” என்பதன் படி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கற்கையாகவே இது விளங்குகின்றது. இதனால் அதிகாரத்தின் இயல்பு, வியாபகம், அதன் அடிப்படை போன்ற விடயங்களை ஆய்வு செய்யும் ஒரு கற்கை நெறியாக அரசியல் விஞ்ஞானம் காணப்படுகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானிகள் இக் கற்கைநெறியை “அதிகாரத்திற்கான போராட்டமாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறுகின்றனர். ஏனெனில் தனிநபர்கள் அதிகாரத்தை அனுபவிப்பது அல்லது அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என விரும்புவது போன்ற உளவியல் நிலைகள் அரசியலில் பிரதிபலிக்கின்றன. இதனால் அதிகாரத்திற்கான போராட்டங்களும் நிகழ்கின்றன. இச் செயல் முறை காரணமாக உளவியலானது அரசியலில் பிரதான இடம் வகிக்கின்றது. பிரட்டிறிக் எம் வொற்கின்ஸ் (Fredrick M.Watkins) என்பவர் “அரசியல் விஞ்ஞானம்; பற்றிய முறைப்படுத்தப்பட்ட கல்வி என்பது அரசு பற்றியதோ அல்லது குறிப்பிட்ட நிறுவனங்கள் பற்றியதோ அல்ல. பதிலாக அதிகாரம் பற்றியதும்ää அதன் பிரச்சினைகள் பற்றியதுமான ஓர் புலன்சார் விசாரணையாகும்”. எனக் கூறுகின்றார்.
பொருளியல் அணுகுமுறை
பொருட்களின் உற்பத்தி, விநியோகம், அதன் பங்கீடு என்பன பொருளாதாரத்தில் பிரதானமாக கருத்தில் எடுக்கப்படும் பண்புகளாகும். இப்பண்புகளைத் தீர்மானிக்கும் சக்தி “அரசு” என்ற நிறுவனத்திடமே இருக்கின்றது. நியமங்கள், விதிகள் என்பவற்றையும் அரசே தீர்மானிக்கின்றது. எனவே பொருளாதாரம் என்பது அரசு என்ற ஒன்று இல்லாமல் இயங்க முடியாது அரசியல் நிகழ்வின் போது பொருளாதாரமும் ஒன்றிணைந்தே காணப்படுகின்றது. இதேவேளை பொருளாதாரம் என்பது வரலாற்றில் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது. இப்பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் போது அதற்கேற்ப அரசுகள் யாவும் தம்மை மாற்றியமைத்திருக்கின்றன. காலனித்துவ உருவாக்கமும் பொருளாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. பொருளியல் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பது பல சிந்தனையாளர்களையும், தாராண்மைவாதம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற சித்தாந்தங்களையும் தோற்றுவித்தது. இச்சித்தாந்தங்கள் அரசு எவ்வாறு மீள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்ற விதிகளைக் கொண்டிருந்தன.அடம்ஸ்மித் காலத்திலிருந்து இச்சிந்தனைகள் காணப்படுகின்றன. ஜெ.எஸ் மில், கால் மாக்ஸ் , மிற்சேல் போன்றோர் மேற்கொண்ட ஆய்வானது அரசுக்கும், பொருளாதாரத்திற்கும் புதியதொரு விஞ்ஞான விளக்கத்தைத் தருவதாக அமைந்தது. குறிப்பாக முதலாளித்துவ சமூகமைப்பு மீது மாக்ஸ் கொடுக்கும் விமர்சனம் இங்கு குறிப்பிடக் கூடியளவிற்கு செல்வாக்குச் செலுத்தியதுடன், பொருளாதாரத்தினை மையமாகக் கொண்டே தனது கோட்பாட்டையும் நிலை நிறுத்தியுள்ளனர்.
மாக்சிச அணுகுமுறை
மாக்சிச அணுகுமுறை தனக்கென ஒரு தனித்துவமான இடத்தினைப் பெற்றதொன்றாகும். இது நவீன, மரபு சார் அணுகுமுறை ஆகிய இரண்டினதும் பண்பைக் கொண்டிருப்பதுடன் கால் மாக்ஸினால் உருவாக்கப்பட்டதுமாகும். மாக்சிசம் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், இயக்கவியல் பொருள் முதல்வாதம் எனும் இரு பெரும் தத்துவங்களினூடாக தனது ஆய்வை மேற்கொண்டுள்ளது. இவ்வணுகுமுறையினூடக அரசியல் விஞ்ஞானத்தினை நோக்கும் போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள, அபிவிருத்தியடைந்த நாடுகள் என்பவற்றுக்கிடையிலான ஏகாதிபத்தியப் பண்பு, ஏகாதிபத்தியச் சுரண்டல், நவகாலனித்துவம் என்பவற்றை விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் மாக்சிச அணுகுமுறை உள்நாட்டு ரீதியாக முதலாளித்துவ சுரண்டல்களை தொழிலாளர்கள் இனங்கண்டு கொள்ளவும், அதன் வழி புரட்சிகள் இடம்பெறவும் துணை புரிகின்றது. இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் முதலாளித்துவம் நலன் பேணும் முதலாளித்துவமாக இருப்பதும், வர்க்க முரண்பாடுகளும், வர்க்க முறைமைகளும் சமூகத்தில் வலுவிழந்து வருவதுடன், இன முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. மாக்சிச அணுகுமுறையின் இறுதிக்கட்டமாகிய கம்யூனிஸ சமூகம் அடையப்படும் முன் மாக்ஸ் தற்போதுள்ள நலகாலனித்துவ சமூகம் தோன்றும் என்பதை எதிர்வு கூறத் தவறி விட்டார் என்ற வகையில் இவ்வணுகுமுறை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.