மாக்கியவல்லி

இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் 1469ஆம் ஆண்டு வைகாசி மாதம் 3ஆம் திகதி நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை ஒரு சட்டத்தரணியாக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் இலத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது. மாக்கியவல்லி தனது 29வது வயதில் Florentine குடியரசின் இரண்டாவது Chancellor பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு பொறுப்பாகவும் இருந்தார். இது மாக்கியவல்லி அரசியல் பற்றிய தெளிவினை பெறுவதற்கு பெரிதும் உதவியிருந்தது. 1512 ஆம் ஆண்டு புளோரன்ஸ் குடியரசு குழப்பமடைந்ததுடன், மாக்கியவல்லியின் தொழிலும் சிக்கலடைந்தது. 1512ஆம் ஆண்டு கார்த்திகை பதவியிலிருந்து விலக்கப்பட்ட மாக்கியவல்லி, 1513ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றுக் கொண்ட மாக்கியவல்லி சிறை வாழ்க்கைக்கு பிந்திய நாட்களை தனது ஓய்விற்காக பயன்படுத்தினார். இவ் ஓய்வு காலத்தில் தனது இராஜதந்திர அனுபவங்கள், வரலாறு ஆட்சியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் என்பவைகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.

மாக்கியவல்லியின் ஆய்வு நூல்களில் Prince’, ‘Discourse’ ஆகிய இரு நூல்களும் மிகவும் பிரபல்யமானதுடன் இவருடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவைகளுமாகும். 1513ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Prince என்ற நூலை எழுதியிருந்தார். மிகவும் அர்ப்பணிப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்ட இந்நூல் ஆட்சியாளனுக்கு ஆலோசனை வழங்குகின்ற நூலாகவே இருந்நது. ‘Discourse’ என்ற நூலில் குடியரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றிற்கு வருவதனூடாக கலப்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்க மாக்கியவல்லி முற்படுகின்றார். இந்நூல் பெருமளவிற்கு புளோரன்ஸ் நகரத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருந்தது. ஆயினும் 1512ஆம் ஆண்டு The Art of War என்ற நூல் ஒன்றை இதற்கு முதல் மாக்கியவல்லி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாக்கியவல்லியின் அனேக எழுத்துக்களுக்கான சரியான காலம் இன்றுவரை தர்க்கத்திற்குரியதாகும்.

மறுமலர்ச்சியும் இத்தாலியும்

பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளை பாதித்தது போன்று இத்தாலியையும் பாதித்தது. மறுமலர்ச்சியானது மானிடத்தின் மறுபிறப்பாகவே நோக்கப்படுகின்றது. மனிதன் தனது புதிய வாழ்க்கைக்கு மீளவும் திரும்புவதாக இக்காலத்தினை குறிப்பிடுவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருந்தது.

மறுமலர்ச்சியானது தனிமனித சுதந்திரத்தினை முதன்மைப்படுத்தியதுடன் மனிதனின் சிறப்பினையும் உலகத்தின் புகழையும் முதன்மைப்படுத்தியது. மனிதன் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதை விரும்புகின்றவனாக காணப்பட்டான். மனிதன் கிறிஸ்தவ சமய செல்வாக்கில் இருந்து விடுபட்டு இயற்கை நோக்கியும், சுயமுயற்சி, சுயசிந்தனை என்பவைகள் நோக்கியும் நகர்வதில் நாட்டம் உள்ளவனாக காணப்பட்டான். இக்காலம் மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்ட காலமாகும். மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டமை நவீன உலகின் பெரும் பலமாக உணரப்பட்டது. கிறிஸ்தவ சமயமும், தேவாலயமும் போதித்த மானிட வாழ்வின் பயனற்ற தன்மை, துன்பம், அடக்கம், வறுமை, துறவறம், என்பவற்றை எதிர்த்து மறுமலர்ச்சிக்காலம் மானிடத்தின் உயர்தன்மை, கௌரவம், என்பவற்றை உறுதிப்படுத்தியது. இதன்மூலம் மனிதன் சிந்திக்கும் சுதந்திரத்தை, விசாரிக்கும் சுதந்திரத்தை, வினா எழுப்பும் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டான். இச்சுதந்திரங்கள் உலகின் புதிய மனிதனை தோற்றிவித்தது. சமய விசுவாசம் என்பதற்கு அப்பால் தனிமனிதனின் சுய யதார்த்தம், மகிழ்ச்சி, புகழ், பெருமை என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.

மேலும் சமய சார்பற்ற அரசு என்ற எண்ணக்கரு பிரதான அரசியல் அலகாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசியரசு என்பது ஒரு புலக்காட்சிக்குட்பட்டது என்பதுடன் அரச இறைமை என்ற எண்ணக்கருவும் முதன்மையடைந்தது. இவற்றினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நாடுகாண்பயணங்களும், புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் நடைபெற்றன. புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை வர்த்தகம், பொருளாதார அபிவிருத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, மானிடம் நோக்கிய தத்துவங்கள் அபிவிருத்தியடைவதற்கு உதவின. அச்சு இயந்திரம், அச்சுப் பதிப்பு, நூலகம், பல்கலைக்கழகம், போன்றவற்றின் தோற்றம், கல்வியறிவில் மாற்றத்தினை ஏற்படுத்த கல்விப்புரட்சி நிகழ்ந்நது. கல்விப்புரட்சியானது பழமையான மொழிகளாகிய கிரேக்க, இலத்தீன், மொழிகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மறுமலர்ச்சியானது இத்தாலியின் பழைய வர்த்தக, பொருளாதார முறைமைகளை இல்லாதொழித்ததுடன் புதிய வர்த்தக, பொருளாதார முறைமைகளையும் தோற்றிவித்தது. அத்துடன் மறுமலர்ச்சியின் தாக்கம் இத்தாலியின் சமூக, அரசியல் நிறுவனங்களிலும் பிரதிபலித்தது. இத்தாலி அரசியல் ரீதியாக Naples, Milan, Venice, Florence, Papal என ஐந்து பெரும் அரசுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. ஐக்கிய இத்தாலியினை உருவாக்கக் கூடிய அதிகாரம் யாரிடமும் காணப்பட்டிருக்கவில்லை.

ஐந்து அரசுகளும் வௌ;வேறு திசைகளில் சென்றதுடன் சர்வாதிகாரப் போக்குடனும் செயற்பட்டன. இத்தாலியில் ஒற்றுமை காணப்படாமையால் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்பும், எப்போதும் இருந்து வந்ததுடன், இதிலிருந்து மீளுகின்ற ஆர்வமும் இருக்கவில்லை. இது பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போன்ற நாடுகளின் ஏகாதிபத்திய அபிலாசைகளுக்கு இத்தாலி விட்டுக் கொடுக்கின்றதாக இருந்தது. இத்தாலி இவ்வாறு பலவீனப்பட்டு இருக்கும் போது திருச்சபையும், பாப்பாண்டவரும், தம்மை மேலும் பலமான நிலையில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்வதிலேயே முழு முயற்சில் ஈடுபட்டனர். பாப்பாண்டவரினதும், திருச்சபையினதும் இச் செயற்பாடு மாக்கியவல்லிக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. மாக்கியவல்லி திருச்சபைக்கும், பாப்பாண்டவருக்கும் எதிரான கருத்துக்களை உருவாக்கி திருச்சபையின் பிடியிலிருந்து இத்தாலியை மீட்க விரும்பினார்.

தற்பெருமையும் (Ego) மனிதனும்

மாக்கியவல்லியின் கருத்துப்படி மனிதர்கள் அடிப்படையில் பலவீனமானவர்களாகவும், இழிவானவர்களாகவுமே காணப்படுகின்றார்கள். நன்றியில்லாதவர்களாகவும், வஞ்சனை மிக்கவர்களாகவும், அச்சம் நிறைந்தவர்களாகவும், அபாயத்தினை சந்திக்க தயங்குகின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். மனிதர்களது மன விருப்பங்கள் நிறைவற்றனவாகவும், மனதில் திரும்பத் திரும்ப இவ்விருப்பங்கள் வருகின்றவைகளாகவும் காணப்படுகின்றன. அடிப்படையில் மனித இயல்பு சுயநலமானதும், தற்பெருமை மிக்கதுமாகும். மனித வாழ்க்கை அடிப்படையில் மிருகங்களின் வாழ்க்கை போன்றதாகும். ஆனால் தமது பாதுகாப்பு கருதி சர்வதேச ரீதியாக தமக்கிடையில் ஐக்கியப்படல் வேண்டும் என எண்ணுகின்றார்கள். ஒழுக்கக் கேடானது, தீயது என்பவற்றிலிருந்து நல்லது நேர்மையானது எனக் கருதப்படுகின்றவைகளை தரம் பிரித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதர்களிடம் காணப்படுகின்றது. ஆயினும் ஒழுக்கமற்றவர்களாகவே மனிதர்கள் வாழ்கின்றார்கள். சமூகத்தில் நல்லதை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்படுவதால் தமது ஒழுக்கமற்ற பண்பை மனிதர்கள் மறைக்கின்றார்கள் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.

மனிதன் சமூக விரோதியாகவும், நேர்மையில்லாத் தன்மை கொண்டவனாகவும்,அராஜகம், பணப்பேராசை, காமவெறி போன்ற குணாம்சங்கள் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வதற்காக தனது தந்தையினை கூட கொலை செய்வதை ஏற்றுக் கொள்ளுகின்ற மன உணர்வு கொண்டவனாக மனிதன் காணப்படுகின்றான். மனிதனது நாட்டமெல்லாம் அதிகாரம், சொத்து, புகழ் இம்மூன்றினையும் எவ்வாறான வழிவகைகளை பின்பற்றியாவது தேடுவது, அடைவது என்பதாகவே உள்ளது. இதனால் மனிதன் ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமாக கைப்பற்றுதல், போன்ற மன உணர்வினால் தூண்டப்படுகின்றவனாக காணப்பட்டான். மனித வாழ்க்கை அராஜகம், முரண்பாடு என்பவற்றினால் தீர்மானிக்கப்பட்டன. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை, தேவைகளை, நிறைவேற்ற வேண்டியிருந்தது. மக்களின் சந்தோசமான மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக மாறியது. இது சமூக வாழ்க்கையில் அதிருப்தியை ஏற்படுத்த சமூக முரண்பாடு, அராஜகம் என்பன முதன்மையடையலாயிற்று என மாக்கியவல்லி கூறுகின்றார். மனிதனிடம் நேர்மையினையும், நீதியையும் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டுமாயின் ஒழுக்கம் நிறைந்த ஆட்சியாளனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இவ்வாட்சியாளன் மனிதர்களுக்கிடையில் பலமும், துணிவும் உள்ள தலைவனாகவும், ஆட்சியாளனாகவும், உருவாக வேண்டும் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.

இளவரசனும், ஆட்சிக்கலையும்

வரலாற்றிற்கு ஊடாகவே மாக்கியவல்லி தனது சிந்தனைகளை முன்வைக்கின்றார். வரலாறு என்பது அவருக்கு கற்றுக் கொடுக்கும் ஆசானாக காணப்பட்டது. இதனால் வரலாற்றினை விரும்பிக் கற்கின்றவராக இவர் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும் என்பதற்கு அப்பால் எதிர்காலத்திற்கான முன்னோக்கிய பாய்ச்சலாகும். வரலாற்று மாற்றங்கள் அபிவிருத்திப் பாதையின் படிக்கற்களாகும் என்பது இவரது கருத்தாகும். வரலாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்துடனும் தொடர்புடையது என்பதால் ஆட்சியாளனின் ஒவ்வொரு செயற்பாட்டுடனும் வரலாற்றினை தொடர்புபடுத்துபவராக மாக்கியவல்லி காணப்படுகின்றார்.

ஆட்சியாளனின் சட்டங்கள் அரசியலுக்கு ஆரோக்கியத்தினையும், தெளிவினையும், தருவதாக இருக்க வேண்டும். ஊழல் கொண்ட சமுதாயம் ஒரு போதும் தானாகத் திருந்தமாட்டாது. எனவே அதனை திருத்துவதற்கு ஆட்சியாளனே முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமான அரசு ஒன்றினை உருவாக்க தனிமனிதனே முயற்சிக்க வேண்டும். மக்களின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டே சட்டங்களும், ஆட்சியும் உருவாக்கப்படல் வேண்டும். ஆட்சியாளன் புதிய அரசை உருவாக்கவும்,பழைய அரசை புதிப்பிக்கவும், பழைய அரசாங்கத்தினை புதிப்பிக்கவும் முயற்சிப்பவனாக இருக்க வேண்டும். ஆட்சியாளன் அரசை உருவாக்குகின்ற கலைஞன் மட்டுமல்ல. சமுதாயத்தினை, பொருளாதாரத்தினை,சமயத்தினை உருவாக்குகின்ற கலைஞனாகவும் இருக்க வேண்டும். பலமான அரசு ஒன்று உருவானால்த்தான் பொதுவிவகாரங்களில் மக்கள் பங்குபற்ற முடியும். குடியரசு ஒன்றில் தான் தாராண்மை என்பது சாத்தியமானதாகும். நாட்டுபற்று உள்ளவர்கள் தான் உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களால் தான் தாராண்மை பாதுகாக்கப்படும். அரசு அயலவர்களை தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அயலவர்களிற்குள் அரசின் குறிப்பிட்ட எதிரி காணப்படுவான். இவ் எதிரியை அழிப்பதற்காக அரசு தனது அதிகாரத்தினையும், நிலப்பரப்பினையும் அதிகரிக்க கட்டாய முயற்சி செய்ய வேண்டும். இவ்விடத்தில் அரசை மாக்கியவல்லி வரைவிலக்கணப்படுத்தும் போது “பாதுகாப்பினைப் பேணுவதற்காக பலத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு” என்கின்றார்.

அரசு பலம் பெறுவதற்கு இராணுவத்தின் முக்கியத்துவத்தினை மாக்கியவல்லி எடுத்துக் காட்டுகின்றார். சிறப்பானதும், பலமானதுமான அரசு மக்கள் இராணுவத்தினை கொண்டிருக்குமாயின் அது வெற்றிகரமாக செயற்படமுடியும். அரசு பலம் பெறுவதற்கு மக்கள் இராணுவ அமைப்பை சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் இராணுவம் அரசு ஒன்றின் பிரதான தூணாகும். இதற்காக மக்களில் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவர்கள் இராணுவ நுட்பங்கள் யாவும் கற்றவர்களாகவும், உளவியல் ரீதியாக எவ்வேளையிலும் யுத்தத்தினை சந்திக்க தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும்.

திறமை வாய்ந்ததும், சிறப்பான ஒழுக்கம் நிறைந்ததும், கீழ்படிவினைக் கொண்டதும், ஆயுதங்களைக் கொண்டதுமான இராணுவக் கட்டமைப்பினை உருவாக்கி பராமரிக்க வேண்டியது ஆட்சியாளனின் கடமையாகும். மிகவும் சிறப்பாக பயிற்றப்பட்ட இராணுவத்தினை கொண்டிருக்கும் அரசு, தனது அயலவர்களிலிருந்தும் ஏனைய ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட அரசுகளிலிருந்தும் எழும் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும் என மாக்கியவல்லி ஆலோசனை கூறுகின்றார். மாக்கியவல்லி இது தொடர்பாக மேலும் கூறும்போது “ ஒவ்வொரு அரசினதும் பிரதான அடித்தளமாக சிறப்பான சட்டங்களும், சிறப்பான ஆயுதங்களுமே இருக்க வேண்டும். அரசு ஒன்று சிறப்பான சட்டங்களினையும், சிறப்பான ஆயுதங்களினையும் கொண்டிருக்காவிட்டால் எங்கே சிறப்பான சட்டங்களும் ஆயுதங்களும் காணப்படுகின்றனவோ அதனை தவிர்க்கமுடியாது பின் தொடர வேண்டி ஏற்படும்” என்கின்றார்.

அதிகாரமும் ஆட்சியாளனும்

மாக்கியவல்லி இளவரசனுக்கு அதிகாரத்தினை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்குகின்றார். ஆட்சியாளன் பெருந்தன்மையுடனும் தாராண்மைச் சிந்தனையுடனும் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். எப்பொழுது எது அவசியமோ அதனை வெளிப்படுத்தக் கூடிய பலமுடையவனாக ஆட்சியாளன் இருக்க வேண்டும். அரசு ஒன்றினை பலம், பாதுகாப்பு, திறமை, நீடிப்பு என்பவற்றுடன் ஆளுவது இளவரசனின் பொறுப்பாகும். எவ்வேளையிலும் பிறரைவிட உயர்நிலையினை எடுக்கக் கூடியவனாகவும், எதனையும் தொடக்கி வைக்கக் கூடியவனாகவும் ஆட்சியாளன் இருக்க வேண்டும். பயம் என்பது தெரியாதவனாக இருக்க வேண்டும். பயம் தெரியாதவனாக இருந்தால்தான் ஆட்சியாளன் மீது பயபக்தி மக்களுக்கு ஏற்படும். ஆளுவதற்கான வழிமுறைகளை தெரிவு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்துக்களையும், பெண்களையும் தனக்காக தேடுவதை விரும்பக் கூடாது. இவைகளில் ஆட்சியாளன் நாட்டமுள்ளவனாக இருந்தால் மக்களின் ஆதரவை இழப்பதுடன் மக்களில் தங்கியிருக்க வேண்டியும் ஏற்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி நற்குணத்துடனும், கொடூரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு உதவியாக அலுவலர்களையும், ஆலோசகர்களையும், தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தனக்கு கீழ்படிய மறுப்பவர்களை கட்டுப்பட மறுப்பவர்களை தெரிவு செய்யக் கூடாது.

ஆட்சியாளன் தனது நிலப்பிரதேசத்தினை விஸ்தரிக்க முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும். பலவீனமான அரசுகளை தாக்குகின்றவனாகவும், பலவீனமான அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்து ‘அதிகாரச் சமநிலையினை’ பேணுகின்றவனாகவும் இருக்க வேண்டும். ஆட்சியாளன் ஒரு போதும் தனித்து இயங்குகின்ற கொள்கையினை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது. கூட்டாக இயங்குகின்ற கொள்கையினை எப்போதும் பின்பற்றுகின்றவனாக இருக்க வேண்டும். உள்நாட்டு மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், ‘நடுநிலை வகித்தல்’ என்ற கொள்கையினை உருவாக்கி பின்பற்றுதல் என்பது சாத்தியமற்றதாகும். எனவே தான் மாக்கியவல்லி ‘சிறப்பான பக்கத்தில் சாய்ந்திருப்பது எப்போதும் சிறப்பானது’ என்ற கருத்தினை முன்வைக்கின்றார்.

மாக்கியவல்லி சட்ட ரீதியற்ற வன்முறைகளை உத்தியோகபூர்வமாக அழிப்பதற்கான ஆலோசனைகளையும் இளவரசனுக்கு வழங்குகின்றார். இளவரசன் இரக்கமற்றவனாக இருக்க வேண்டும். இது தொடர்பாக மாக்கியவல்லி கூறும் போது “ சிங்கத்தைப்போல் பலத்துடனும் நரியை போல் தந்திரத்துடனும்” இளவரசன் செயற்படல் வேண்டும்.

துணிவு, வீரம், தந்திரம், கூர்மையான மதிநுட்பம் போன்ற பண்புகள் கொண்டவனாக இளவரசன் காணப்படல் வேண்டும். இவைகள் யாவும் அதிகாரப் போராட்டத்தில் ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும். ஆட்சியாளன் போதிய துணிச்சலுடன் தனது எதிரியுடன் யுத்தம் புரிய வேண்டும். பொறிகளை வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். துணிவு, தந்திரம், இவைகள் இரண்டும் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும்.

மாக்கியவல்லியின் கோட்பாடுகள் வரலாற்றினையும் உளவியலையும் அடிப்படையாகக் கொண்டதாகும். மாக்கியவல்லியின் அவதானத்தின்படி எல்லாம் சூழ்நிலைகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனமாற்றங்களுக்கான உந்துதலை உளவியலே கொடுக்கின்றன. அதாவது துணிவுடன் செயற்படுவதா? தந்திரத்துடன் செயற்படுவதா? என்பதை உளவியல் அம்சங்களே தீர்மானிக்கின்றன.

ஆயினும் மாக்கியவல்லி மனிதனின் உளவியல் தொடர்பாக கூறும் கருத்துக்கள் விவாதத்திற்குரியதாகும். மனிதன் தொடர்பாக தவறான கருதுகோள் ஒன்றினை உருவாக்கி நிரூபிக்க மாக்கியவல்லி முற்படுகின்றார் என்ற விமர்சனங்கள் உள்ளன. மனிதனுடைய நற்குணங்களை இனங் காணத்தவறும் மாக்கியவல்லி யுத்தத்தினாலும், ஆயுதமுனையிலும் ஆட்சி செய்ய முற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாத சர்வாதிகாரக் கருத்தாகவே உள்ளது.

மாக்கியவல்லி அரசையும், ஆட்சியாளனையும் பலம், அதிகாரம் என்ற நோக்கிலேயே பார்க்கின்றார். இவரைப் போன்று இவருக்குப் பிற்பட்ட காலத்திலும் அரசையும், ஆட்சியாளனையும் அதிகார நோக்கில் பலர் பார்த்துள்ளனர்.

17ம் நூற்றாண்டில ஹெப்ஸ், ஹரிங்டன் (Hobbes, Harrington) போன்றோர்களும், 18ம் நூற்றாண்டில் ஹமில்டன், மடிசன் (Hamilton, Madison) போன்றோர்களும், 19ம் நூற்றாண்டில் மொஸ்கா, பரெரோ (Mosca, Pareto) போன்றோர்களும் 20ம் நூற்றாண்டில் லாஸ்வெல், கப்லன், ரோபேர்ட் டால் (Lasswell, Kaplan, Robert Dhal) போன்றோர்களும் அதிகாரத்தினை மையமாகக் கொண்டே தமது சிந்தனைகளை உருவாக்கியிருந்தார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாக்கியவல்லியின் சிந்தனைகள் இரு பெரும் சர்வாதிகாரிகளால் பின்பற்றப்பட்டிருந்தன. இத்தாலியினை 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்திருந்த முசோலினி (Mussolini) “ நான் மாக்கியவல்லியின் இளவரசனை நம்புகின்றேன். அது ஆட்சியாளனுக்கான உயர் வழிகாட்டியாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். சீனாவின் மாக்சிச புரட்சியாளராகிய மாவோ சேதுங் துப்பாக்கி குழலிலிருந்தே அதிகாரம் பிறக்கின்றது (Power comes from the barrel of a gun) என்று கூறுவதன் மூலம் யுத்தத்தினையும், பலத்தினையும் அதன்மூலம் அதிகாரத்தினை தேடுகின்றவராகவும் காணப்பட்டிருந்தார். ஆனால் யுத்தங்கள் பெரும் அழிவினையும், இரத்தக்களரியினையுமே ஏற்படுத்தியிருந்தது. யுத்தமும் ஆயுதமும் உலகை ஆட்சி செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,615 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>