கௌடில்யர்

புராதன இந்திய அரசியல் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. இப்புராதன இந்திய அரசியல் கோட்பாடுகளுள் ஒன்றே கௌடில்யரத கோட்பாடாகும். மனித வாழ்வுடன் தொடர்புபடும் அனேக விடயங்களுடன் கௌடில்யர் தொடர்புபடுகின்றார். நாகரீகம், கலாசாரம், நலன்புரி அரசு (Welfare State) போன்ற அனைத்து விடயங்களும் கௌடில்யரின் சிந்தனைக்குட்படுகின்றன. ‘நலன்பேணும் அரசு’ என்ற சிந்தனை; புராதன இந்தியாவிற்கேயுரியதாகும். கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரம் என்னும் நூலே இவ்வரசியல் சிந்தனையின் மூலநூலாகும். இந்நூல் கி.மு. 326 ஆண்டில் எழுதப்பட்டதாகும். கௌடில்யரின் எண்ணங்களும், சிந்தனைகளும், அர்த்த சாஸ்த்திரத்தினூடாகவே பிறக்கின்றன. கௌடில்யரின் நலன்பேணும் அரசு என்ற சிந்தனை மேற்குத் தேச கல்வியாளர்களின் கவனத்தினை ஈர்த்திருக்கவில்லை. ‘நலன் பேணும் அரசு’ என்ற சிந்தனை ஐரோப்பாவிற்கேயுரியது என்றதொரு கருத்து காணப்படுகின்றது. அத்துடன் இச்சிந்தனை மேற்குத் தேசத்தில் தோன்றியதொரு சிந்தனை என்ற கருத்தும் காணப்படுகின்றது.

நலன்பேணும் அரசும்

இந்திய சிந்தனைகள், முழுப்பிரபஞ்சமும் இறைவனின் படைப்பு என்பதுடனும்,ஆத்மஞானத்துடனும் தொடர்புடையதாகும். இச்சிந்தனை தற்கால இந்திய சிந்தனையாளர்களாகிய ஆதிசங்கரர், புத்தர், காந்தி ஆகியோர்களிடமும் இருந்தது. மனிதர்கள் அனைவரதும் வாழ்க்கை பிரபஞ்சத்துடன் தொடர்புடையதாகும் என்பது கௌடில்யரின் கருத்தாகும். சமூக ஒழுங்கமைப்பும் அரச செயற்பாடும் பொதுவான நலன்களையும், பொது நோக்கங்களையும் இலக்காக கொண்டிருக்க வேண்டும். மனிதனின் நலன் என்பது ஆன்மீக பயணத்திற்கான ஆரம்பப் படியாகும். எனவே தனிமனிதன் மகிழ்ச்சியாகவும், நலத்துடனும், வாழ்வதற்கு ஏற்ப சமூக நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

நலன்பேணும் அரசு எல்லாப் பிரஜைகளினதும் நலனைக் கருத்தில் கொண்டு எல்லா வளங்களையும் பயன்படுத்தி நல்வாழ்விற்கு திட்டமிடல் வேண்டும். மேலும் செல்வம் என்பது மிகவும் உயர்ந்த பலமாகும். அரசு ஒன்று தனது நோக்கத்தினை அடைவதற்கு இத்தேசிய செல்வங்களே பயன்படுகின்றன. ஒரு அரசு பிரதானமாக பின்வரும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

  1. சமூக ஒழுங்கமைப்பினை உறுதியாக பின்பற்ற வேண்டும் – வர்ணாச்சிரம தர்ம ஒழுங்கமைப்பிற்கு ஏற்ப சமூக ஒழுங்கமைப்பினை பேணுதல். இதுவே தர்மம் ஆகும்.
  2. மக்களின் நலன்களை கவனிக்க வேண்டும் – மகிழ்ச்சியான வாழ்க்கை, எல்லா வளங்களும் கிடைக்கச் செய்தல், போன்ற நலன்களை கவனித்தல்.
  3. எல்லா பிரஜைகளுக்கும் பொதுவான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
  4. சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் – உள்நாட்டு ஒழுங்கையும், அமைதியையும் பேணுவதுடன், அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாத்தல்.
  5. பொது வேலைகளை கவனிக்க வேண்டும். – வெளியுறவு, இராஜதந்திர சேவைகள்,போன்றவற்றின் மூலம் பொதுக் கடமைகளை கவனிக்க வேண்டும்.
  6. இயற்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெரும் துன்பத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல் வேண்டும். இவைகள் அரசின் செயற்பாடுகளாக இருக்க வேண்டும் .

சமூக, பொருளாதார, செயற்பாடுகளில் பங்கேற்றபதாகவும், தலையிடுவதாகவும், ஒழுங்குபடுத்துவதாகவும் அரசு இருக்க வேண்டும். அதேநேரத்தில் தனியாள் பொருளாதார முயற்சிகளை பல்வேறு வழிகளிலும் கட்டுப்படுத்துகின்றதாக இருக்க வேண்டும். இலாபநோக்கம், தரம், நிறை, அளவு, நீதியான விலை போன்றவை அரசினால் கட்டுப்படுத்தப்படல் வேண்டும். ஏனெனில் தனியார் பொருளாதார முயற்சிகள் பொதுவாக இலாப நோக்கம் கொண்டவைகளாககும். இதனால் மக்கள் நலன் பாதிப்படையும். எனவே அரச கட்டுப்பாடு அல்லது தலையீட்டினை கௌடில்யர் விரும்புகின்றார்.

கௌடில்யர் வேலை கொள்பவன், வேலையாட்கள் ஆகியோர்களிற்கு இடையிலான தொடர்பு பற்றியும் குறிப்பிடுகின்றார். அரசிற்குச் சொந்தமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், அதனை ஒழுங்குபடுத்துவதும் அரசின் கடமையாகும். மேலும் மக்களுக்கு பயன்தரக் கூடிய விலங்குகளை பேணுவதுடன் சமூக நன்மைக்காக பொருட்களை இறக்குமதி செய்வதும் அரசின் கடமையாகும்.

நலன்பேணும் அரசு தனிமனிதர்களுடைய பழக்கவழக்கங்களிற்கும் பொறுப்பானதாகும். தனிமனிதர்கள் தங்கள் குடும்பத்தை கைவிட்டால் அவர்களை அரசு தண்டிக்க வேண்டும். மரபு ரீதியான உறவுக்கு ஊடாக கணவன், மனைவி, தந்தை, மகள், சகோதரன், சகோதரி ஏனைய உறவுகளை பேண வேண்டும். அரசானது மனிதனது சமூக, பொருளாதார, கலாசார ஒழுக்க விடயங்களில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பஞ்சம், தொற்றுநோய்கள் பரவும் காலத்தில் அரசு மக்களுக்கு தேவையான தானியங்களையும், விதைகளையும் இலவசமாக தேவைக்கு ஏற்ப விநியோகிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படின் உணவு, உறைவிட வசதி, பாதுகாப்பாக இடம் பெயர வைத்தல், இதற்கான போக்குவரத்து வசதிகள் யாவற்றையும் அரசு இலவசமாக மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும். மொத்தத்தில் மக்களின் துன்பங்கள் யாவற்றினையும் நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு அரசிற்குரியதாகும்.

சமூகத்தினை ஒழுங்குபடுத்தவும், திட்டமிடவும், பொருளாதாரத்தினைத் திட்டமிடவும், அரச நிர்வாக இயந்திரம் முக்கிய பங்காற்ற வேண்டும். நிர்வாகிகள், மக்களுடைய சமூக பொருளாதார வாழ்க்கை நிலைகளை உயர்த்துவதற்கு பல்வேறு சட்டங்களினையும் இயற்ற வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் நிர்வாகத்தினை ஒழுங்கமைக்க வேண்டும். நிர்வாக ஒழுங்கமைப்பு, நிதி ஒழுங்கமைப்பு, நீதி நிர்வாகம், தனியாளினதும், பொதுச் சேவையில் உள்ள ஊழல்களினை நீக்குதல் போன்றவற்றிற்கு ஏற்ப நிர்வாகமானது ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.

ஆட்சியாளன்

கௌடில்யர் அரசனை சுவாமி என அழைக்கின்றார். இவரே அரசின் தலைவராகும்.இவரை முதன்மைப்படுத்தியே ஆட்சிக்கலை தொடர்பாக கூறுகின்றார். அரசனைச் சுற்றியே அரசின் ஏனைய மூலங்கள் எல்லாம் இயங்குகின்றன. நலன்பேணும் சமூகம் ஒன்றின் வெற்றி அரசனின் பொறுப்பிலும், தலைமைத்துவத்திலுமே சார்ந்திருக்கின்றது அல்லது தங்கியிருக்கின்றது. அரசன் உதவியற்றவர்களின் பாதுகாவலனாகவும், வீடற்றவர்களுக்கு வீடு வழங்குபவனாகவும் மகன் இல்லாதவர்களுக்கு மகனாகவும், தந்தை இல்லாதவர்களுக்கு தந்தையாகவும் இருக்க வேண்டும்.

அரசன் மக்களுடைய முகவராக தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டு சட்டங்களை உருவாக்க வேண்டும். சம்பிரதாயங்கள் தான் ஒரு நாட்டின் அரசியல் திட்டமாகவும், நீதிச் சட்டங்களாகவும் இருக்க வேண்டும். அரசன் கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தின் மையப் பொருளாகும். ஏறக்குறைய அரசின் செயற்பாடுகள் அனைத்தும் அரசனாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே தான் கௌடில்யர் அரசனை ஒரு அரசின் தூணாகவும், ஆட்சிக்கலை நுட்பத்தின் எஜமானாகவும் உருவாக்குகின்றார்.

கௌடில்யர் அரசன் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றார். ஏனெனில் அரசனின் மனமும், உடலும் தூய்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால்தான் மக்களிற்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதற்காக இளவரசன், எண்கணிதம், எழுத்தறிவு, தத்துவம், பொருளியல், நிர்வாகம், விஞ்ஞானம், அரசியல் போன்ற கல்வியை கற்க வேண்டும். இப்பாடங்கள் யாவும் பொருத்தமான ஆசிரியர்களிடம் கற்க வேண்டும்.

இளவரசன் தனது உடலை பேணுவதற்காக பிரமச்சரியத்தை ஒழுங்காக பேணிவருதல் வேண்டும். பிரமச்சரிய வாழ்க்கை 16 வயது வரை நீடிக்க வேண்டும். இதன் பின்னர் இளவரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் புராண இதிகாசங்களாகிய இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைக் கற்க வேண்டும். மேலும் தர்ம சாஸ்த்திர நூல்களாகிய மனு, அர்த்தசாஸ்த்திரங்களை கற்க வேண்டும். இந்நூல்களில் சட்ட நுணுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இளவரசன் தனது உடலில் எவ்வித நோய்களும் தொற்றாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக சிறப்பான பயிற்சியையும், கட்டுப்பாட்டினையும் பேணிவர வேண்டும். இளவரசன் சுய கட்டுப்பாடு கொண்டவனாக இருக்க வேண்டும்.

அரசன் சிறப்பான ஒழுக்கத்தினையும், புரிந்துணர்வினையும் கொண்டவனாக இருக்க வேண்டும் அரசனின் செயற்பாடும், தர்மமும் மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். அரசன் நீதியை நிலை நாட்டுபவனாக இருக்க வேண்டும். மக்கள் சமத்துவமாகவும், நீதியாகவும், நடத்தப்படுவதை அரசன் உறுதிப்படுத்த வேண்டும. இந்திய மரபாகிய வர்ணாச்சிரம தர்மத்தினை பேணிக்காப்பதன் மூலம் ‘நலன் பேணுதல்’ என்ற எண்ணக்கருவினை உறுதிப்படுத்துதல் வேண்டும். அரசனே சட்ட , நிர்வாக, நீதி, நிதி, இராணுவ, வர்த்தக, கலை, கல்வி போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்பானவனாக இருக்க வேண்டும்.

அரசனின் பிரதான கடமை அவனுடைய தர்மத்தினை நிறைவேற்றுவதாகும். இக்கடமைகள் சட்டப்படியான கடமைகள் என்பதை விட ‘நலன்புரி’ கடமைகள் என வரையறுப்பதே சிறப்பானதாகும். அரசன் கல்வி, சமயம், கலை, விவசாயம், வர்த்தக அபிவிருத்திகளை முன்னேற்றுகின்ற கடமை உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். கௌடில்யரின் நலன்பேணும் அரசு “ குடிகளின் ஆட்சியாகவே இருக்கும். இது இராணுவம் சார்ந்த ஒன்றாக இருக்கக் கூடாது. சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் ஒவ்வொருவரதும் நலனையும் அடிப்படையாக கொண்டு அரசு உருவாக்கப்பட வேண்டும். “சமூகத்தின் தனிமனிதர்கள் ஒவ்வொருவரதும் நலனையும் அடிப்படையாகக் கொண்டே ஆட்சியாளன் ஆட்சி செய்ய வேண்டும்.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

10,114 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>