புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றவகையில் ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.03, 2013.08.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002சால்ஸ் பெட்றி ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய மூத்த அதிகாரியாவார். இவர் தலைமையில் உள்ளக அறிக்கை தயாரிக்கும் குழு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்-கீ-மூனினால் நியமிக்கப்பட்டிருந்தது. உள்ளக மீள்மதிப்பீட்டு குழு தனது அறிக்கையினை இலங்கையின் உள்ளநாட்டு யுத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்களிலுள்ள ஏழாயிரம் உள்ளக ஆவணங்களைப் பரிசீலனை செய்து தயாரித்திருந்தது. இவ் ஆவணங்கள் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதற்கு சாட்சி கூறுகின்றன. வன்னியில் 2009 ஆம் ஆண்டு தை மாதம் ஷெல்தாக்குதல் மூலம் பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்;கான அழிக்கமுடியாத ஆவணங்களை ஐக்கிய நாடுகள் சபை வைத்திருந்தது. 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் ஏறக்குறைய ஐந்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகின்றது. இதில் பெரும்பாலானவர்கள் இளம் சிறுவர்களாகும். இலங்கை இராணுவத்தின் யுத்த இலக்கிற்கு உள்ளாகியிருந்த மிகவும் ஒடுங்கிய சிறு நிலப் பிரதேசத்திற்குள்ளிருந்து இலகுவில் வெளியேறமுடியாது ஒருலட்சம் பொதுமக்கள் அகப்பட்டுக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

பெட்றி அறிக்கை

2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளை ஐக்கிய நாடுகள் சபை தடுக்க முடியாமல் போனமை தொடர்பாகப் பரிசீலனை செய்வதற்கு பொதுச் செயலாளர் பான் – கீ-மூனினால் நியமிக்கப்பட்ட பெட்றி குழு தனது அறிக்கையினைச் சமர்பிப்பதற்கு தயாராக இருந்த சில நாட்களுக்கு முன்னர் இவ் அறிக்கையிலுள்ள முக்கிய விடயங்கள் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் ஒலிபரப்பப்பட்டன. இதனால் உலகெங்கிலும் பரபரப்பு ஏற்படத்தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில் பனிப்போரின் பின்னர் உலக சமாதானத்தினை உருவாக்குதல், சமாதானத்தைப் பேணுதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்குள்ள சட்டபூர்வ நிலை தொடர்பாக வித்தியாசமானதொரு காட்சிநிலையினையும், வருந்தத்தக்க நிலையினையும் தான் வெளிப்படுத்தவுள்ளதாக சால்ஸ் பெட்றி தெரிவித்திருந்தார்.

சார்ல்ஸ் பெட்றி தனது அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை பொறுப்புக் கூறவேண்டிய பின்வரும் விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

  1. யுத்தப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் கொடுத்த குறைவான புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மையினை உரியமுறையில் ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு செய்யத் தவறிவிட்டது.
  2. யுத்தப் பிரதேசத்திற்குள் சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதைத் தடுக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தடைகளைத் தகர்க்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.
  3. தாக்குதல்களின் போது மக்கள் கொல்லப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தலைமை செயலகம் விருப்பமற்றிருந்தது.
  4. இவ்விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனான ஐக்கிய நாடுகள் சபையின் தொடர்பாடல் உறுதியற்றும், திருப்தியற்றும்; காணப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தனது “பாதுகாக்கும் பொறுப்பு” என்ற கொள்கையில் தோல்வியடைந்துள்ளது.

எனவே பாரியளவிலான மனிதப் படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஐக்கிய நாடுகள் சபை மிகவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இதன்மூலம் வல்லரசுகளின் கருவியாக ஐக்கிய நாடுகள் சபை தொழிற்பட்டுக் கொண்டிருந்தது என மிகவும் இலகுவாக கூறமுடியும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் செய்திருந்த யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2006 ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இவ்வாறான ஒரு முடிவினை எடுப்பதற்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பக்க பலமாக இருந்தன. பொதுமக்களின் உரிமைகள் அழிக்கப்படும்போதும், மிகவும் கொடூரமான மனிதப் படுகொலைகள் வன்னியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் சாட்சி கூறுவதைத் தவிர்ப்பதற்காக இந்நாடுகள் தமது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டிருந்தன எனக் கூறலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்களுக்கும்,வல்லரசுகளுக்கும் இடையில் இது தொடர்பாக இருந்த உறவினை பெட்றி பின்வருமாறு விபரிக்கின்றார். “இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தொடர்பாகப் பொறுப்புக் கூறும் சூழலில் அங்கத்துவ நாடுகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை தவிர்த்துவிட்டு, அங்கத்துவ நாடுகள் மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள விருப்பம் கொண்டிருந்த விடயங்களின் செல்வாக்கிற்குட்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தொனி,நோக்கம்,விடயம் என்பன வெளிப்பட்டன” எனக் கூறுவதன் மூலம் வன்னி யுத்த முனையில் அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களின் பாதுகாப்பு,பொதுமக்களின் உரிமைகள்,சமாதானம் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை அங்கத்துவ நாடுகள் அதில் கவனம் செலுத்தமாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் பூரணமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை கேட்பதற்கே ஆவலாக இருந்துள்ளன என்பதை பெட்றி மறைமுகமாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கையில் மிகவும் கொடூரமான மனிதப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இது தொடர்பாக விவாதிப்பதற்கும்,தடுப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபை தனது பொதுச்சபையினை அல்லது பாதுகாப்புச் சபையினை அல்லது மனித உரிமைகள் பேரவையினை உடனடியாகக் கூட்டவில்லை என பெட்றி குற்றம் சாட்டியுள்ளார்.

உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பலவருடங்களின் பின்னர் பெட்றி அறிக்கை “ இலங்கையில் நடைபெற்ற சம்பவத்திற்கு போதியளவு பொறுப்புக்கூறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாதிருக்க வேண்டும்.அவ்வாறான சூழல் மீண்டும் எதிர்காலத்தில் ஏற்பட்டால் மனதாபிமானப் பாதுகாப்பினை ஐக்கிய நாடுகள் சபை மிகவும் உயர்ந்தளவில் வழங்குவதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்.” எனக் கேட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களில் உள்ள “மனித உரிமைகள்” மற்றும் “பாதுகாப்பிற்குப் பொறுப்பு” போன்ற சுலோகங்கள் வல்லரசுகள் தமது நலன்களுக்காகப் பயன்படுத்தும் சுலோகங்களேயாகும்.பெட்றி தனது அறிக்கையின் இறுதிப் பகுதியில் மனித உரிமை மீறல்களைத் தடுத்தல், யுத்தக் குற்றங்களைத் தடுத்தல் போன்றவற்றிற்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவாதத்தினை வழங்கவேண்டும் எனப் பொதுவாக் கோருவதற்குப் பதிலாக யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் சபை மிகவும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.

இவ் அறிக்கை தொடர்பாக பான்-கீ-மூன் கருத்து கூறும் போது “தவறுகளிலிருந்த பாடம் கற்போம்,எமது பொறுப்பை பலப்படுத்துவோம், எதிர்காலத்திற்காக பயனுள்ள வகையிலும், அர்த்தத்துடனும்; செயற்படுவோம்,எமக்கிருந்த தடைகளை வெல்லுவதற்கு எல்லா வகையான மனித நேயத்துடனும்; செயற்படுவது எமது கடமையாகும். பொதுமக்கள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவது முக்கியமானது என்பதை இருபது மாதத்திற்கு மேலாக ஜனாதிபதி பசார் அல் அசாட்டிற்கு (Bashar al Assad) எதிராக சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போர் ஞாபகப்படுத்துகின்றது. இப்போரில் ஏறக்குறைய இருபதாயிரம் பொதுமக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். எதிர்கால தனது செயற்பாட்டிற்காக ஆலோசனை கூறுவதற்கும் நிபுணர்கள் குழுவின் சிபார்சுகளை கருத்தில் கொள்வதற்கும் சிரேஸ்ட மட்டத்திலான குழுவொன்றை தான் உருவாக்கப் போவதாக கூறியுள்ளார்.”

உள்ளக அறிக்கை பான்-கீ-மூனையோ அல்லது கொழும்பிலும் மற்றும் நியுயோர்க்கிலும் உள்ள அவரது நடுத்தரத்திலான அதிகாரிகளையோ குற்றம் சாட்டவில்லை.இவர்கள் மிகவும் சாதுரியமாக இவ்விடயங்களில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பித்து விட்டனர்.உண்மையில் ஐக்கிய அமெரிக்காவினாலும் அதன் நட்பு நாடுகளாலும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற பெயரில் நடாத்தப்படும் யுத்தங்களுக்கு ஆதரவாக இருப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் இலக்காக உள்ளது.

மனித உரிமைகள் பேரவை

ஐக்கிய அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்; விடயங்கள் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்க முயற்சித்த போது தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் பூரணமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். யுத்தக் குற்றங்களைச் சுமத்தி இலங்கை அரசாங்கத்திற்கு அரசியல் அழுத்தத்தினை கொடுப்பதற்கும், பயமுறுத்துவதற்கும் மனித உரிமை மீறல்களை வல்லரசுகள் பயன்படுத்திக் கொண்டன.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கில் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதனால் கவலையடைந்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்க ஐக்கிய அமெரிக்காவும், அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் முயற்சிக்கவில்லை. பதிலாக சீனாவுடன் மிகவும் உயர்தளவில் இலங்கை பேணிவரும் நட்புறவினை முறியடிக்கவே இலங்கை மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க இந்நாடுகள் முயற்சிக்கின்றன. 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படுதவற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வன்னியல் நிகழும் மனித உரிமை; மீறல்கள் தொடர்பாக வரையறுக்கப்பட்ட சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது அதனை இந்தியா, சீனா மற்றும் ரஸ்சியா ஆகிய நாடுகளின் உதவியுடன் இலங்கை அதனைத் தோற்கடித்தது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்பட்ட தோல்வி

மிகவும் பரீட்சயமான வழிமுறையாகிய அறிக்கை தயாரித்தல் அதன்மூலமாக பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல் என்பதனூடாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் அடைந்த தோல்விக்கு நியாயம் கூறுகின்றது. இவ்வகையில் மிகவும் பரீட்சயமான வகையில் , வழக்கமான தொனியில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் அடைந்த தோல்விக்கு தனது நியாயங்களை உள்ளக அறிக்கை முன்வைத்துள்ளது.

கடந்தகாலத் தோல்விகள் போன்றே விசாரணைகள் மூலம் உண்மைகளைக் கண்டு பிடித்தல் மீண்டும் நடைபெற்றுள்ளது. இது ஓரே இயல்புள்ள நோயினை பல மருத்துவர்கள் ,ஒன்று சேர்ந்து திரும்பத் திரும்பக் பகுப்பாய்வு செய்து எவ்வித சிகிச்சையும் செய்யாமல் நீண்ட காலத்திற்கு நோயாளியை வைத்தியசாலையில் வைத்திருத்தலுக்கு ஒப்பானதாகும். எனவே உள்ளக அறிக்கை என்ற பெயரில் பழையவிடயங்களை புதிய பொதியலிட்டுத் தந்துள்ளார்கள் எனக் கூறலாம்.

வன்னியில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகளைத் தடுக்க முடியாமல் போனமை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு ரீதியான தோல்வி (systemic failure) என உள்ளக அறிக்கை கூறுகின்றது. இவ்வாறு உள்ள அறிக்கை கூறுவது ஒன்றும் ஆச்சரியமானதொன்றல்ல. இதோபோன்ற தொரு அவதானமே 1994 ஆம் ஆண்டு ருவென்டா இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடு பற்றிய சுதந்திர விசாரணை (Independent Inquiry into the actions of the United Nations during the 1994 genocide in Rwanda) (என்னும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் “ருவென்டாவில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை தடுக்கவும், நிறுத்தவும் முடியாமல் போனமையின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு ரீதியாக முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது” எனக் கூறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் நிகழ்ந்த மனிதப் படுகொலைகள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துகின்ற அங்கத்துவ நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பான பதிலைக் கூறுவதாக இருந்தால், அங்கத்துவ நாடுகள் எதனைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்?,அங்கத்துவ நாடுகள் எதனை மனதில் நிலைநிறுத்தி விடயங்களை செவிமடுக்க வேண்டும்? போன்ற விடயங்களின் செல்வாக்கிற்கு உட்பட்டே பதில் கூறவேண்டியிருந்தது.

2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை சமாதான செயற்பாடுகளுக்கான குழு (Report of the Panel on United Nations Peace Operations) இதேமாதிரியானதொரு அறிக்கையினை வெளியிட்டிருந்தது. இதில் ”பாதுகாப்புச் சபைக்கு எது தெரிய வேண்டும், எதனை பாதுகாப்புச் சபை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலகம் தெரிவிக்க வேண்டும்” எனத் கேட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையினால் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகத்தர்கள் தவறாக வழிநடாத்தப்படுகின்றனர்;. உலகில் கொடுமையான மனிதப் படுகொலைகள் நிகழும் போது ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பது தொடர்பாகப் பாதுகாப்பு சபையே தீர்மானிக்கின்றது.சராசரி மனித உணர்வுகள் பாதுகாப்பு சபையினால் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. பதிலாகப் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளின் உச்ச நலனே கருத்தில் கொள்ளப்படுகின்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபை திரும்பத் திரும்ப தோல்வியடைகின்றது.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஏற்பட்ட தோல்வி ஐக்கிய நாடுகள் சபையின் இரத்தம் தோய்ந்த வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியுமல்ல,இறுதித் தோல்வியுமல்ல. புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றவகையில் ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்படவில்லை. குறிப்பாக பாதுகாப்புச் சபை இதுவரை மறுசீரமைக்கப்படவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபை கொடுமையான மனிதப் படுகொலைகள் நிகழும் போது அதனைத் தடுக்க முடியாமல் தடுமாறுகின்றது.

Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

* Copy This Password *

* Type Or Paste Password Here *

9,607 Spam Comments Blocked so far by Spam Free Wordpress

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>