சீனா உருவாக்கியுள்ள புதிய பட்டு வீதி தந்திரோபாயம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.26, 2014.07.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)

clip_image002சமகால அரசியல், பொருளாதார காட்சி நிலைகள் கடந்த காலத்தைவிட மேலும் மாற்றமடைந்து வருகின்றது. பூகோளப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியினால் சீனாவும் பாதிப்பினை எதிர் கொள்ளத் தொடங்கியுள்ளது. பூகோள பொருளாதார தகராறு, சர்வதேச நாடுகளில் நடைபெற்றுவரும் உள்நாட்டு மோதல்களால் சீனாவின் ஏற்றுமதிப் பொருளாதாரம், நேரடி வெளிநாட்டு முதலீடு போன்ற பொருளாதார முறைமைகளில் பாதிப்பினை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் பலமான கம்யூனிச நாடாகிய சீனாவில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு விடலாம் என்ற அச்சவுணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளது. இவ் அச்சவுணர்விலிருந்து சீனா விரைவாக விடுபட வேண்டியுள்ளது. இதற்காக புதிய ஏற்றுமதி சந்தைகளை கண்டுபிடிக்க வேண்டிய தேவை அல்லது இருக்கின்ற ஏற்றுமதி சந்தைகளை பாதுகாக்க வேண்டிய தேவை சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவிற்குள் பொருளாதார உறுதியினைப் பேணுவதுää சீனாவின் மாகாணங்களில் நிலவும் குறைந்த அபிவிருத்தியுள்ள மாகாணங்கள், சிறந்த அபிவிருத்தியுள்ள மாகாணங்கள் என்ற இரண்டிற்குமிடையிலான இடைவெளியை இல்லாமல் செய்வது, அயல்நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி வேறுபாடுகளைக் குறைப்பது போன்ற விடயங்களில் சீனா கவனஞ் செலுத்தத் தொடங்கியுள்ளது.

புதிய தலைவர்கள்

சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தின் பொருளாதார செழிப்பினை சீனாவின் மேற்குப் பிராந்தியம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை மேற்கு, தெற்கு அயல்நாடுகளுடன் சீனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என சீனாவின் ஆட்சியாளர்கள் நம்புகின்றார்கள். சீனாவின் உள்நாட்டு அரசியல் உறுதியின்மைக்கு சீனாவின் உள்நாட்டு பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் சமனிலையற்ற பொருளாதார வளர்ச்சி பெரும் ஆபத்தானதாகவுள்ளது.

இந்நிலையில் சீனக் கம்யூனிச கட்சியின் ஐந்தாவது தலைமுறையினைச் சேர்ந்த தலைவர்கள் சீனாவின் அதிகாரத்தினைப் பொறுப்பெடுத்து ஏறக்குறைய இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இப்புதிய தலைவர்கள் சீனாவின் ஆட்சியதிகாரத்தைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து அயல்நாடுகளுக்கு தொடர்ந்து மேற்கொண்ட விஜயத்தின் மூலம் சீனாவின் வெளியுறவுக் கொள்கையினை மேலும் மெருகூட்டத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு, தெற்கு நாடுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது என்ற புதிய சீன ஜனாதிபதியின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப உலக நாடுகள் அனைத்திற்கும் தொடர்ந்து சீனாவின் தலைவர்கள் விஜயம் செய்கின்றனர்.

இவ்வகையில் மக்கள் சீனக் குடியரசின் புதிய ஜனாதிபதி எக்ஸ்.ஐ.ஜின்பிங் (ஓ.ஐ துinpiபெ) நான்கு தடவைகள் மேற்கொண்ட வெளிநாட்டு பிரயாணங்களின் மூலம் பதினான்கு நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். சீனாவின் பிரதம மந்திரி மூன்று தடவைகள் மேற்கொண்ட வெளிநாட்டு பிரயாணங்களின் மூலம் ஒன்பது நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார்.

இருதலைவர்களும் இலத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா (U.S.A) , ஆபிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என மேற்கு, தெற்கு அயல்நாடுகள் அனைத்தலுமாக இருபத்திமூன்று நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தனர். இதில் பன்னிரெண்டு நாடுகள் சீனாவிற்கு மிகவும் அண்மையிலுள்ள நெருங்கிய நட்பு நாடுகளாகிய ரஸ்சியா, துருக்மெனிஸ்தான், கஸகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, புருனே, வியட்நாம், தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகியனவாகும்.

அதிகாரப் போட்டி

சமகாலத்தில் சர்வதேச நாடுகளின் வெளியுறவுக் கொள்கையில் காணப்படும் பலமுனை அதிகாரப் போட்டிக்கான சூழலுக்கு சீனா புதிய வியாக்கியானத்தையும், கருத்தினையும் கொடுக்க முயற்சி செய்கின்றது. சமகாலத்தில் நிலவும் பலமுனை அதிகாரப் போட்டியின் அரசியல் காட்சி நிலைகளை பின்வருமாறு விபரிக்கலாம்.

 1. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு பூகோள அதிகாரம் கைமாற நிகழும் போராட்டம்,
 2. சீனாவின் பூகோள அதிகார எழுச்சியும் அதன் உள்நாட்டுப் பிரச்சினைகளும்,
 3. கரையோர தகராறுகளால் கிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் சீனாவிற்கு ஏற்பட்டுள்ள பதட்டமான உறவு,
 4. ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அதிகார மையமாக நிலை கொள்ள ஐக்கிய அமெரிக்கா எடுக்கும் முயற்சி,
 5. சோவியத்யூனியனின் வீழ்ச்சிக்கும் பின்னர் மீண்டும் தனது அதிகாரத்தினை நிலைநிறுத்த ரஸ்சியா எடுக்கும் முயற்சி.

சமகாலத்தில் நிலவும் சர்வதேச அதிகாரப் போட்டிக்கான அரசியல் காட்சி நிலைகளை எவ்வாறு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக சீனத்தலைவர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளார்கள். உண்மையில் ஆசியப் பிராந்தியத்தின் வல்லரசாக வளர்வது மாத்திரமன்றி ஐக்கிய அமெரிக்காவிற்கும் ரஸ்சியாவிற்கும் எதிரான அதிகாரச் சமநிலையினை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பாகவும் சீனாவின் புதிய தலைவர்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இதற்காக சீனா தனது உள்நாட்டு நலன்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. சோவியத் யூனியன் தனது உள்நாட்டு நலன்களில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டதனால் ஏற்பட்ட அனர்த்தம் கம்யூனிய அரசு ஒன்றின் வீழ்ச்சிக்கு எவ்வாறு காரணமாக இருந்தது என்பதிலிருந்து சீனா புதிய பாடம் கற்றிருந்தது. இதனால் எஞ்சியுள்ள சீன கம்யூனிச அரசைப் பாதுகாப்பதற்கான சில முன்னேற்பாடுகளை செய்யவேண்டிய நிர்பந்தம் சீனாவின் புதிய தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றினை பின்வருமாறு விபரிக்கலாம்.

 1. சீனாவின் உற்பத்திப் பொருளாதாரத்திற்குத் தேவையான சக்திவள விநியோகத்திற்கான போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது,
 2. உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தக் கூடிய சந்தைகளை சீனாவிற்கு வெளியில் உருவாக்குவதும், பாதுகாப்பதும்,
 3. உள்நாட்டில் அரசியல் உறுதிநிலையினைப் பேணுவதுடன், ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலும் அரசியல் உறுதிநிலையினைப் பேணுவது,

புதிய சிந்தனை

இப்பின்னணியிலேயே சீனாவின் புதிய பட்டு வீதி எனும் கொள்கையினை அவதானிக்க வேண்டும். புதிய பட்டு வீதி உருவாக்கம் என்ற சிந்தனை உடனடியாக ஏற்பட்ட புதியதொரு சிந்தனையல்ல. 1990களில் சோவியத் யூனியன் சிதைவடைந்த பின்னர் சீனக் கம்யூனிச கட்சித் தலைவர்களின் சிந்தனையில் இது உருவாகியிருந்தது. 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் புதிய உலக அதிகார ஒழுங்கு தோற்றம் பெற்றது. இது சீனாவின் மேற்குத் தேச நண்பர்களுக்கு புதிய பிறப்பாக உணரப்பட்டது.

புதிய உலக அதிகார ஒழுங்கிற்கு ஏற்றவகையில் சீனா தனது எல்லைத் தகராறுகளை அயல்நாடுகளுடன் கலந்தாலோசித்து தீர்க்கத் தொடங்கியதுடன், எதிர்காலத்தில் அதிகார உச்சியில் சீனாவிற்கு இருக்கக் கூடிய முக்கியத்துவத்தையும் உணரத் தொடங்கியுள்ளது.

1992 ஆம் ஆண்டு தென்சீனப் பிரதேசங்களுக்கு டெங் ஸியாபிங் (Deng Xiaoping) மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் சீனாவின் கரையோர பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதுடன் தொடர்புபடும் வகையில் சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தினை மேற்கொள்வது என்ற சிந்தனையினை வலியுறுத்தியிருந்தார். சந்தைப் பொருளாதாரத்திற்கும் சோலிச பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவினை இவர் தெளிவுபடுத்தியிருந்தார். சோசலிச பொருளாதாரம் தனக்கான சந்தையினை வைத்திருக்கிறது. ஆனால் சந்தைப் பொருளாதாரம் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சமமானதல்ல. இதனடிப்படையில் சீனாவில் பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இவரின் கருத்தாக இருந்தது. இவரின் பொருளாதார சீர்திருத்தத்தில் கரையோர மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை உருவாக்குதல், சீனாவில் கரையோர நகரங்களை உருவாக்குதல், சீனாவின் கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி வலயங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் உள்ளடங்கியிருந்தன.

இதனடிப்படையில் அயல்நாடுகளுடன் கூட்டுறவினை மேம்படுத்தி, சீனா தன்னைப் பலப்படுத்த தொடங்கியது. 1996 ஆம் ஆண்டு சீனா, ரஸ்சியா, கசகிஸ்தான், கிர்கிஸ்தான், தஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களுடைய எல்லைத் தகராறுகளை தீர்க்கத் தொடங்கின. இது புதிய பட்டு வீதி என்;ற எண்ணக்கருவிற்கான ஆரம்பமாக கருதப்பட்டது.

புதிய பட்டு வீதி என்பது அண்மைக்காலமாக சீனாவினால் முன்னிலைப்படுத்தப்படும் புதிய மேற்கோள் வாசகமாகும் (Mottos) . சீனாவின் இப் புதிய மேற்கோள் வாசகத்திற்காக புதியபட்டு வீதி என்னும் கொள்கையினை சீனத் தலைவர்கள் உருவாக்கி அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.

சீனத் தலைவர்களின் சிந்தனையில் உதயமாகியுள்ள “புதிய பட்டு வீதி” என்ற எண்ணக்கரு புதிய பட்டு வீதி பொருளாதார வலயத்தினை உருவாக்கும் வகையில் உதயமாகியுள்ளது. இப்புதிய பொருளாதார வலயம் இரண்டு இலக்குகளைக் கொண்டதாகும்.

 1. மத்திய ஆசியாவுடன் குறிப்பாக வர்த்தகத் துறையில் பலமான பொருளாதார உறவினை உருவாக்குவது,
 2. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் சுமூகமான நட்புறவினைப் பேணுவதற்கு முயற்சி செய்தல்.

இவ்விரண்டு இலக்குகளும் சீனக் கம்யூனிசக் கட்சியின் 18வது மத்தியகுழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டு வீதி என்பது மீ@ருவாக்கம் பெற்றுவரும் வரலாற்றுக்கால அல்லது புராதன கால வர்த்தக, கலாசார போக்குவரத்துப் பாதையாகும். இப்போக்குவரத்துப் பாதை சீனாவிற்கும் மத்திய ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, மத்திய கிழக்குப் பிரதேசங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டிருந்தது.

புதிய பொருளாதார வலயம்

2013 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் சீன ஜனாதிபதி எக்ஸ்.ஐ. ஜின்பிங் மத்திய ஆசிய நாடுகளாகிய துருக்மெனிஸ்தான், கசகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பத்து நாட்கள் மேற்கொண்ட விஜயத்தின் போது புதிய பட்டு வீதி பொருளாதார வலயம் எனும் திட்டத்தினை வெளியிட்டிருந்தார். அத்துடன் சங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தின் பதின்மூன்றாவது உச்சிமகாநாட்டிலும், ரஸ்சியாவில் நடைபெற்ற ஜி 20 (G20) உச்சி மகாநாட்டிலும் கலந்து கொண்டதுடன் ஐந்தாவது தடவையாக ரஸ்சிய ஜனாதிபதி வல்டமிர் புட்டினையும் (Vladimir Putin) சந்தித்துக் கொண்டார்.

சங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தின் உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட சீன ஜனாதிபதி எக்ஸ்.ஐ. ஜின்பிங் மத்திய ஆசியா, ஐரோப்பா, சீனா ஆகியவற்றிற்கிடையில் உறவினைப் பலப்படுத்தக்கூடிய புதிய பட்டு வீதி பொருளாதார வலயத்தினை கூட்டாக உருவாக்குவதற்கான ஐந்து ஆலோசனைகளை முன்மொழிந்திருந்தார்.

 1. இணைந்த பொருளாதார கூட்டுறவிற்கு உதவும் வகையில் கொள்கைத் தொடர்பாடலை பலப்படுத்துதல்,
 2. வீதித் தொடர்புகளைப் பலப்படுத்துதல். இதன்கீழ் மத்திய ஆசியாவிலிருந்து இந்து சமுத்திரம் வரையும், பசுபிக் சமுத்திரத்திலிருந்து பால்டிக் கடல் வரையும் ஒடுங்கிய போக்குவரத்து பாதையினை உருவாக்குதல். பின்னர் படிப்படியாக இப்போக்குவரத்துப் பாதைக்கும் ஆசியப் பிராந்தியங்களுக்கிடையிலும் போக்குவரத்து தொடர்பாடல் வலைப்பின்னலை உருவாக்குதல்.
 3. வர்த்தக உதவிகளைப் பலப்படுத்துதல். இதன்மூலம் வர்த்தக தடைகளை நீக்குதல், வர்த்தக முதலீட்டு செலவீனங்களை குறைப்பதற்கு முயற்சி செய்தல்.
 4. நிதிக் கூட்டுறவினைப் பலப்படுத்துதல். இதன்மூலம் நாணய கொடுக்கல் வாங்கல்களில் விசேட கவனம் செலுத்துதல். பண்ட பரிமாற்ற செலவீனத்தை குறைத்தல், பொருளாதாரப் போட்டியினால் அதிகரிக்கும் நிதி அபாயத்தினைக் கற்றுக் கொள்ளுதல்.
 5. மக்களுக்கிடையில் பரஸ்பர தொடர்பினைப் பலப்படுத்துதல்.

சங்காய் கூட்டுறவு ஸ்தாபனத்தில் சீன ஜனாதிபதி எக்ஸ்.ஐ. ஜின்பிங் ஆற்றிய உரையும் இந்தோனேசியப் பாராளுமன்றத்தில் இவர் ஆற்றிய உரையும் சாராம்சத்தில் ஒரே மாதிரியானவையாகும். இரண்டு உரைகளிலும் நிதி விடயங்கள் உட்பட உறுதியான பொருளாதாரக் கூட்டுறவு, கட்டிடங்கள், நாடுகளுக்கிடையிலான பெருந்தெருக்கள், நாடுகளுக்கிடையிலான விரைவு புகையிரத சேவை போன்ற இணைந்த உட்கட்டுமான திட்டங்களில் கூட்டாக செயற்படுதல், கூட்டுப் பாதுகாப்பின் தரத்தினைக் அதிகரித்தல், 21ஆம் நூற்றாண்டின் கரையோர பட்டு வீதி திட்டத்தினூடாக கரையோரப் பொருளாதாரம், சுற்றுச் சூழல், விஞ்ஞான கூட்டுறவு என்பவற்றைப் பலப்படுத்துதல் போன்றன முதன்மை பெற்றிருந்தன.

இப்பின்னணியிலேயே பிலரஸ்சியா (Belarusia) ஜனாதிபதி 2013 ஆம் ஆண்டு ஆனிமாதம் சீனாவிற்கு மேற்கொண்ட விஜயம் அவதானிக்கப்பட்டது. புதிய பட்டு வீதி தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவும் இது நோக்கப்பட்டது. மத்திய ஆசியாவிற்கு சீன ஜனாதிபதி விஜயம் செய்த காலத்தில் கசகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தந்திரோபாய பங்காளர் ஒப்பந்தத்;தில் கைச்சாத்திட்டிருந்தார். தஸ்கிஸ்தான் ஜனாதிபதி 2013ஆம் ஆண்டு வைகாசி மாதம் சீனாவிற்கு விஜயம் செய்து சீனாவுடன் தந்திரோபாய பங்காளர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். 2012ஆம் ஆண்டு ஆனிமாதம் இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் சீனாவும் உஸ்பெகிஸ்தானும் கைச்சாத்திட்டிருந்தன. தற்போது மத்திய ஆசியாவிலுள்ள ஐந்து அரசுகளுடன் தந்திரோபாய பங்காளர் உறவில் சீனா கைச்சாத்திட்டுள்ளது.

இதே பொறிமுறையினை ஆசியான் அங்கத்துவ நாடுகளுக்கும் சீனா விஸ்தரித்துள்ளது. மலேசியா, இந்தோனேசியா, ஆகிய நாடுகளுக்கு சீன ஜனாதிபதி மேற்கொண்ட விஜயத்தின்போது இவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதிகாரப் போட்டி

அண்மையில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மகாநாட்டில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவு செலவுத் திட்ட சர்ச்சையால் கலந்து கொள்ளவில்லை. இதனை தனக்கு சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொண்ட சீனா, ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதற்குமான பொருளாதாரப் பங்காளர்களுக்கு (RCEP) 2015 ஆம் ஆண்டு வரை தலைமை தாங்கும் பொறுப்பினை தன் வசப்படுத்திக் கொண்டது.

தென்கிழக்காசியப் பிராந்தியத்திற்குள் சீனாவின் உள்வருகை பூகோள உயர் அதிகாரத்தினை பெற்றுக் கொள்வதேயாகும். சீனாவின் சர்வதேச செல்வாக்கு என்பது அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியிலான எழுச்சியிலானது என்பதே யதார்த்தமானதாகும். தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் பலமான உள்வருகை ஐக்கிய அமெரிக்காவின் ஆசிய பசுபிக் உயர் அதிகாரத்தினை கைவசப்படுத்துதல் என்ற கொள்கைக்கு நேர் எதிரான செயற்பாடாகும்.

சீனா மேற்கு நாடுகளின் எல்லைகளில் மாத்திரமன்றி சோவியத் யூனியனின் சிதைவிற்குப் பின்னர் தோன்றிய அரசுகளின் மீதும் செல்வாக்குச் செலுத்த முயலுகின்றது. மத்திய ஆசிய நாடுகளுடன் சீனா மேற்கொள்ளும் வர்த்தக, பொருளாதார உறவுகள் இதனையே எடுத்துக் காட்டுகின்றது.

ஆயினும் சீனாவின் அயல்நாடுகள் சீனாவினைப் போன்று அரசியல் உறுதியற்ற நாடுகளாகும். இந்நாடுகளில் இன்று வரை தீர்வு காண முடியாத பல உள்நாட்டு மோதல்கள் நடைபெறுகின்றன. இனமோதல், எல்லைத் தகராறு, பிரதேச வேறுபாடுகள், பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்ற உள்நாட்டு மோதல்களுக்கு சீனாவின் அயல்நாடுகள் தீர்வு காணமுடியாதுள்ளன. சீனாவின் தலையிடாமை மூலமான பொருளாதார உதவி எனும் திட்டம் மத்திய ஆசிய நாடுகளுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் மிகவும் கவர்ச்சியானதாக இருந்தாலும், சீனாவின் அரசியல்,இராணுவ செல்வாக்கு மத்திய ஆசியாவிற்கும், தென்கிழக்காசியாவிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக கூறப்படுகின்றது. உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தை மூலம் சிறந்த அரசியல் சூழ்நிலையினை முதலில் உருவாக்க வேண்டும். இதன் பின்னரே பலதரப்பு தந்திரோபாய பங்காளர் உறவின் தரத்தினை உயர்த்தவும், பயன்பெறவும் முடியும்.

Thanabalasingam Krishnamohan

Dr. Thanabalasingam Krishnamohan B.A.Hons.,M.Phil.,Ph.D. Senior Lecturer in Political Science Gr-1 Eastern University, Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*