இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.02, 2014.08.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது )

clip_image001

கடந்த காலங்களில் தென்சீனக் கடல் சார்ந்து சீனாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டிருந்த பதட்டம் இருதரப்பு உறவிலும் பெரும் விரிசல்களை உருவாக்கியிருந்தது. 2013ஆம் ஆண்டு வைகாசி மாதம் 1ஆம் திகதி சீன இராணுவம் வியட்நாமிய கடல் பொருளாதார வலயத்திற்குள் நுழைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியட்நாமிய மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். வியட்நாமிய கடற்பரப்பிற்குள் சீனாவின் கடற்படை அத்துமீறிப் பிரவேசித்தமை உலகளாவிய ரீதியில் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதேயாண்டு வைகாசி மாதம் 6ஆம் திகதி சீன மீனவர்கள் பிலிப்பைன்ஸ் கடல் பிரதேசத்திற்குள் நுழைந்து மீன் பிடித்த போது பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தென்கிழக்காசியாவில் ஏற்பட்டிருந்த இவ் நெருக்கடியான சூழலில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வைகாசி மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ஆசியான் அமைப்பின் உச்சிமாகாநாட்டில் கலந்து கொள்வதற்காக மியன்மாருக்கு விஜயம் செய்திருந்ததுடன், தென்சீனக் கடல் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருந்தார். இது தென் சீனக் கடல் பிராந்தியத்தில் ஐக்கிய அமெரிக்காவிற்குள்ள அக்கறையினை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஆசியாவில் அமெரிக்கா

ஐக்கிய அமெரிக்கா உலகம் முழுவதும் மிகவும் திறன் வாய்ந்த இராணுவ வலைப்பின்லை உருவாக்கியுள்ளது. இவ்வகையில் சீனா தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளுடன் கடந்த பல வருடங்களாக இராணுவத் தொடர்புகளை ஐக்கிய அமெரிக்கா பலப்படுத்தி வருகின்றது. குறிப்பாகத் தெற்காசியாவில் இந்தியாவுடன் பலமான தந்திரோபாயப் பங்காளர் கூட்டுறவினை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

இதன்மூலம் தெற்காசியாவில் இலங்கை, பாக்கிஸ்தான், பர்மா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் சீனா உருவாக்கியுள்ள தந்திரோபாயப் பங்காளர் உறவினை ஐக்கிய அமெரிக்கா வலுவிழக்கச் செய்துள்ளதுடன், சீனாவின் எல்லைப்புற நாடாகிய ஆப்கானிஸ்தானில் தனக்கான படைத்தளத்தினை உருவாக்கி அதன்மூலம் மத்திய ஆசியாவினைக் ஐக்கிய அமெரிக்கா கட்டுப்படுத்தி வருகின்றது.

வடகிழக்கு ஆசியாவில் தென்கொரியா மற்றும் யப்பானுடன் இணைந்து தனது இராணுவத்தினை ஐக்கிய அமெரிக்கா புத்தூக்கப்படுத்தி வருவதுடன், யப்பானுடனான உறவினை மேற்கு பசுபிக் பிராந்தியத்திற்கான தந்திரோபாய மையமாக ஐக்கிய அமெரிக்கா மாற்றியுள்ளது.

தென்கிழக்காசியாவில் ஐக்கிய அமெரிக்கா தனது இராணுவப் பாதுகாப்புக் கூட்டுறவினை விஸ்தரிக்கவும்,பரிமாறவும் திட்மிட்டுள்ளது. எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, பாக்கிஸ்தான், இந்தோனேசியா, சிங்கப்பூர், அவுஸ்ரேலியா மற்றும் ஏனைய ஒசேனியா நாடுகளுடன் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுவும் ஐக்கிய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இராணுவப் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தினை அதிகரிப்பதனூடாக நட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதற்கு சுழற்சிமுறையில் நடைபெறும் இராணுவ ஒத்திகை உதவும் என பென்ரகன் நம்புகின்றது.இவ்வகையில் பாரம்பரியமான ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புக் கூட்டு நாடுகள் தமது பிராந்தியத்தின் பாதுகாப்பினைச் சுயமாகப் பொறுப்பெடுத்து பொருத்தமான வகையில் தமது சொந்த இராணுவத்தின் வலுவினை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.

நட்பு நாடுகளின் இராணுவத்தின் செயல்திறனை பலப்படுத்துவதன் மூலம் தென்கிழக்காசியக் கடற்பரப்பிற்கு ஊடாக மூலப்பொருட்களையும், எரிபொருட்களையும் பாரியளவில் காவிவரும் சீனாவின் கொள்கலன் கப்பல்களை தடுக்கக் கூடிய பலமுடைய இராணுவத்தினை உருவாக்க முடியும் என ஐக்கிய அமெரிக்கா நம்புகின்றது. இது தவிர்க்க முடியாத வகையில் சீனா தனக்கான இராணுவக் கூட்டுக்களையும், வலைப்பின்னலையும் உருவாக்குவதற்கான நிர்பந்தத்தினை உருவாக்கியுள்ளது.

தென்சீனக் கடற்பரப்பில் இந்தியா

தென்சீனக்கடலில் கடல்போக்குவரத்தினை மேற்கொள்வதில் இந்தியா மிகவும் ஆர்வமாவுள்ளது. கிழக்காசியாவிற்குக் கப்பல் போக்குவரத்தினைச் செய்வதற்கான மிகமுக்கியமான நுழைவாயிலாகவும் இக்கடற்பிராந்தியம் உள்ளது. இந்துசமுத்திரம் மற்றும் பசுபிக் சமுத்திரம் ஆகிய இரண்டு பெரியசமுத்திரங்களும் சங்கமிக்கின்ற இடத்தில் தென்சீனக் கடல் அமைந்துள்ளது. எனவே தென்சீனக் கடலில் இந்தியா தனது புவிசார் பொருளியல், புவிசார் அரசியல் விஸ்தரிப்பிற்கும், உறுதித்தன்மைக்கும் ஏற்ற பாதுகாப்பினை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவையினை உணர்ந்துள்ளதுடன், அதற்கேற்ற செயற்பாடுகளையும் செய்து வருகின்றது.

தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் பொருளாதார தந்திரோபாய உறவுகளை இந்தியா பலப்படுத்த முயற்சிப்பதன் மூலம் கடல் வழிப் பாதையினைப் பாதுகாத்து தனது சந்தையினையும், போக்குவரத்தினையும் உத்தரவாதப்படுத்த முயற்சிக்கின்றது. தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளில் இந்தியாவிற்கு உள்ள பொருளாதார நலன் மிகவும் காத்திரமானதாகும்.

தென்சீனக் கடற்பரப்பில் இந்தியா மேற்கொள்ளும் தந்திரோபாய நலன்சார்ந்த செயற்பாடுகள் யாவும் வளர்ந்து வரும் இந்தியாவின் வர்த்தக, பொருளாதார ஆர்வத்தினால் தீர்மானிக்கப்பட்டதாகும். கிழக்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் இந்தியாவின் பொருளாதார நலன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றது.

ஆசிய பசுபிக் நாடுகளுடனான வர்த்தகத்தில் ஏறக்குறைய 55 % வர்த்தகத்தினை இந்தியா தென்சீனக் கடலினூடாகவே மேற்கொள்கின்றது. யப்பான்,கொரியா போன்ற நாடுகளின் பாதுகாப்பான சக்திவள விநியோகத்திற்கு இந்தியா செய்யும் பாதுகாப்பு உதவிகளுக்குப் புறம்பாக, வடபசுபிக் சமுத்திரத்திலுள்ள ரஸ்சியாவிற்குச் சொந்தமான சக்கலீன் தீவிலிருந்து (Sakhalin) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள கப்பல் துறைமுக நகரமாகிய மங்களோர் (Mongalore) வரை செல்லும் எண்ணெய்கப்பல்கள் இக்கடல்பிராந்தியத்தினூடாகவே செல்கின்றன.

இதனால் தென்சீனக்கடல்பிராந்தியம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமாகின்றது. தென்சீனக்கடல் பிராந்தியம் மற்றும் பசுபிக் பிராந்தியம் என்பன இந்தியக்கடற்படையின் தந்திரோபாயச் செயற்பாட்டிற்கு தேவையான இரண்டாவது கடல் பிராந்தியமாக இந்தியக் கடற்படையினால் கருதப்படுகின்றது.எனவே தென்சீனக்கடலில் தொடர்ந்து சீனா ஆதிக்கம் செலுத்துமாயின் இக்கடல்பிராந்தியத்தில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா சிரமங்களை எதிர்கொள்ளலாம்.

வியட்நாமுடனும்,ஏனைய தென்கிழக்காசிய நாடுகளுடனும் குறிப்பாக இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் இந்தியா வளர்த்து வரும் இருதரப்பு உறவு மற்றும் யப்பானுடன் இந்தியா வளர்த்து வரும் தந்திரோபாயக் கூட்டுறவு என்பன சீனாவின் கொல்லைப்புறத்தில் இந்தியா மேற்கொள்ள முயற்சிக்கும் தந்திரோபாய தன்முனைப்பாகவே சீனாவினால் பார்க்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கரின் இத்தந்திரோபாய நிலையினால் எதிர்காலத்தில் தனக்கு ஏற்படக் கூடிய பின்னடைவுகளை சீனா நன்கு உணர்ந்துள்ளது. இதனால் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும், தென்சீனக் கடற் பிராந்தியத்திலிருந்தும் விலகியிருக்குமாறு சீனா கோரிக்கை விடுத்து வருகின்றது. ஏனெனில் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் தனது அதிகாரத்திற்கான முற்பாச்சல் இடமாக தென்சீனக் கடற் பிராந்தியத்தினை சீனா நோக்குகின்றது. இதற்குத்தடையாக இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காம் இருப்பதை சீனா விரும்பவில்லை. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சீனாவின் பிரதம மந்திரி ஐந்து தென் கிழக்காசிய நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தார். இதன்மூலம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருந்த தென்கிழக்காசிய நாடுகளுடனான உறவினை தந்திரோபாய இராஜதந்திர உறவாக மாற்றக் கூடிய சந்தர்ப்பத்தினை உருவாக்கினார்.

புதிய கூட்டுறவு கட்டமைப்புக் கொள்கை

தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சீனாவிற்குமிடையில் அடுத்து வருகின்ற தசாப்த காலத்தில் உறவினைப் பலப்படுத்த சீனப் பிரதம மந்திரி லீ.கிகுயாங் புருனேயில் நடைபெற்ற ஆசியான் உச்சிமகாநாட்டில் இரண்டு சக ஏழு கூட்டுறவு (2107) கட்டமைப்பு என்ற கொள்கையினை சமர்ப்பித்தார். இதில் இரண்டு அரசியல் உடன்பாடுகளும், ஏழு கூட்டுறவுக்கான முன்மொழிவுகளும் உள்ளடங்கியிருந்தன. இரண்டு அரசியல் உடன்பாட்டிற்குள் பின்வருன அடங்கியிருந்தன.

  1. பரஸ்பர அரசியல் நம்பிக்கையினை ஆழமாக்குவதன் மூலம் முன்னேற்றகரமான கூட்டுறவிற்கான அடித்தளத்தினை உருவாக்குதலும், அயல்நாடுகளுடனான நட்புறவினைத் தரமுயர்த்துதலும்.
  2. பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு கூட்டுறவினை ஆழமாக்குவதும், நன்மைகளை பரஸ்பரம் விஸ்தரித்தலும்.

சீனப் பிரதம மந்திரியின் புதிய கொள்கையில் கூறப்பட்டுள்ள ஏழு விடயங்களும் ஆசியான் நாடுகளுக்கும், சீனாவிற்குமிடையிலான எதிர்கால உறவிற்கு பலமானதாகும். அவைகளாவன,

  1. இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டியாகவும் சீனா, ஆசியான் நாடுகளுக்கிடையிலான தந்திரோபாய கூட்டுறவினை நிறுவன ரீதியாக பாதுகாப்பதற்கும், கூட்டுறவினையும், நட்புறவினையும் சட்டபூர்வமானதாக்குவதற்கும் அயல் நாடுகளுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்வது தொடர்பாக சீனா கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது.
  2. பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கான கூட்டுறவு அவசியமானதாகும். ஆசியான் நாடுகளுக்கும், சீனாவிற்குமிடையில் பாதுகாப்பு அமைச்சர்கள் மட்டத்தில் ஆழமான கூட்டுறவினை மெருகூட்டக் கூடிய பொறிமுறையினை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது. இதன்மூலம் சைபர் தாக்குதல் பாதுகாப்பு, நாடு கடந்த குற்றச் செயல்கள், கூட்டுச் சட்ட அமுலாக்கம், ஏனைய மரபு சாராத பாதுகாப்பு என்பனவற்றை உருவாக்க முடியும்.
  3. சீனாவிற்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தினை (FTA) தரமுயர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 2020ஆம் ஆண்டு நூறாயிரம் கோடி (Trillion) அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தினை செய்தல் என்னும் இலக்கினை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், பிராந்தியத்தின் ஒருமைப்பாடும் இணைந்து ஆசியான் நாடுகள் அதிக நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
  4. முன்னோக்கிப் பாய்வதற்கான இணை பொறிமுறை உருவாக்க வேண்டும். இது “சீனா ஆசியான் கூட்டுறவு” என அழைக்கப்படலாம். இதன்மூலம் ஆசியான் நாடுகளை இணைக்கும் புகையிரதப் பாதை “ஆசியான் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி” என்பனவற்றை உருவாக்குதல் வேண்டும். இவ்வங்கி ஆசியான் நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் இடையில் நிதி வழங்குதலை இணைக்கின்ற நிறுனமாக செயற்படும்.
  5. அபாயத்திலிருந்து பாதுகாப்பதற்கான பிராந்திய நிதிக் கூட்டுறவினை பலப்படுத்துதல் வேண்டும். இருதரப்பு நாணய பரிமாற்றங்களின் அளவினையும், வீச்சினையும் அதிகரிப்பதற்கான தேவையுள்ளது. எல்லையிலுள்ள நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தினை உள்ளுர் நாணயத்தில் மேற்கொள்வதற்கான முன்னோடித் திட்டத்தினை விஸ்தரிக்க வேண்டும். பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு என்பனவற்றை சீனா- ஆசியான் வங்கியின் வகிபாகத்தின் மூலம் சீர்படுத்திக் கொள்ளுதல்.
  6. பலமான கரையோர கூட்டுறவுமுறைமையின் தேவை அதிகமாகவுள்ளது. இருபத்தியோராம் நூற்றாண்டிற்கான கரையோர பட்டு வீதியை எல்லோரும் இணைந்து கட்டமைக்க வேண்டும். கரையோரப் பொருளாதாரம், கரையோர இணைப்பு, கரையோர சுற்றுச்சூழல் பாதுகாப்பும், விஞ்ஞான ஆராய்ச்சி, மீன்பிடி போன்றவற்றை கூட்டாக வலுப்படுத்த வேண்டும்.
  7. கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நட்பு ரீதியான கூட்டுறவினை ஏற்படுத்துதல் என்பவைகள் மூலமாக மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை அதிகரிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

ஆசியான் நாடுகள் இத்திட்டத்திலுள்ள பொருளாதார அபிவிருத்தியுடனான விடயங்களை பொதுவாக வரவேற்றுள்ளன. குறிப்பாக இந்தோனேசியா, புருனே, ஆகிய நாடுகள் “ஆசியான் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி” உருவாக்கத்தினை வரவேற்றன.

சீனாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு பத்து வருடங்கள் நீடித்திருக்கக் கூடிய தந்திரோபாய பங்காளர் உறவினை ஏற்படுத்தியுள்ளது. இக் கூட்டுறவின் பிரதான அம்சம் பொருளாதார அபிவிருத்தியினை உருவாக்குவதாகும். ஆசியான் நாடுகளுடன் சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இக்கட்டமைப்பு (2 + 7) ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்து வருகின்ற பத்து வருடங்களில் சீனாவும்ää ஆசியான் நாடுகளும் பாரிய பிராந்திய சந்தைகளைப் படிப்படியாக உருவாக்க முடியும். இச்சந்தையினை அடிப்படையாகக் கொண்டு இருதரப்பும் எல்லா வகையான கூட்டுறவினையும் பலப்படுத்தி பாதுகாக்க முடியும்.

இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு உருவாக்கவுள்ள உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆசியான் நாடுகளுக்கும், சீனாவிற்குமிடையிலான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிதி வழங்கல்களில் ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தவுள்ளது. இதன்மூலம் ஆசியான் நாடுகளுக்கிடையிலும் ஆசியான் நாடுகளுக்கும் சீனாவிற்குமிடையிலும் பெருந்தெருக்கள், புகையிரதப் பாதைகள், கப்பல் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான குழாய்கள் போன்றன உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆசியான் நாடுகளுக்கிடையிலான புகையிரத சேவையினை உருவாக்குவதற்கும், அதன் தரத்தினைப் பேணுவதற்கும் சீனாவின் இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு முயற்சிக்கின்றது. இதன்மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் விரைவு போக்குவரத்திற்கான புகையிரதப் பாதைகளை உருவாக்க சீனா முதலீடு செய்வது தொடர்பாக எண்ணுகின்றது. விரைவான புகையிரத போக்குவரத்தினை ஆசியான் நாடுகளுக்கிடையில் உருவாக்குவதன் மூலம் (Trans Asian Railway) பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகத்தினை விரைவுபடுத்துவது, பிராந்திய ஒருமைப்பாட்டினைப் பேணுவது, போன்றன விரைவுபடுத்தப்படுவதுடன் இலகுபடுத்தப்படும். இதற்காக மூன்று பிரதான மார்க்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று கிழக்கு மார்க்கம். இது கொனாய் (Hanoi) கொச்சியின் நகரம் வ்னம் பென், பாங்கொக், கோலாலம்பூர், ஊடாக செல்லும். இரண்டாவது மத்திய மார்க்கம். இது கோலாலம்பூர், பாங்கொக், வியட்நாம் ஊடாக செல்லும். மூன்றாவது மேற்கு மார்க்கம். இது கோலாலம்பூர், பாங்கொக், ரங்கூன், ரூயிலி ( Ruili) ஊடாக செல்லும்.

குழப்பம்

தென் சீனக் கடல் சார்ந்த நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ள பொருளாதார உறவு, இராணுவ மேலாதிக்கம் என்பவற்றின் அடையாளமாக இது சீனாவினால் கருதப்பட்டது. இதனால் தென்கிழக்காசிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து ஒத்துழைப்பது நலன் சார்ந்து சீனாவிற்கு மிகவும் ஆபத்தானதாக உணரப்பட்டது. மேலும்ää கிழக்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தக உறவினால் 2015ஆம் ஆண்டிற்கும் 2016 ஆம் ஆண்டிற்கும் இடையில் நூறு பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வகையில் தென்சீனக் கடலில் செல்வாக்குச் செலுத்த இந்தியாவிற்குக் கிடைத்துள்ள சந்தர்ப்பம் கருதப்படுகிறது.

தென்சீனக் கடல் சார்ந்த ஆசியான் அமைப்பிலுள்ள குறிப்பாக புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், போன்ற நாடுகளுக்கும் சீனாவிற்கும் இடையில் நீண்டகாலமாக தகராறு நிலவி வருகின்றது. 2009ஆம் ஆண்டு வியட்நாம் மற்றும் மலேசியா இணைந்து சமர்ப்பித்திருந்த ஒன்பது புள்ளிகள் வரைபடம் (Nine-Dashed Line Map) சீனாவினால் நிராகரிக்கப்பட்டது. இவ் வரைபடம் 90 % தென்சீனக் கடல் பிரதேசத்தினை சீனா இழப்பதற்கான வாய்ப்பினைக் கொண்டிருந்தது. இதனால் இத்திட்டத்தினை சீனா எதிர்த்ததுடன் தென்சீனக் கடற் பரப்பில் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியது. சீனாவின் புதிய ஜனாதிபதி எக்ஸ். ஐ. ஜின்பிங் தென்கிழக்காசியா தொடர்பாக சீனா இதுரை பின்பற்றி வந்த கடும் போக்குக் கொள்கையினை ஆரம்பத்தில் பின்பற்றினாலும், 2013 ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்திலிருந்து சில இராஜதந்திர மாற்றங்களைச் செய்திருந்தார்.

புதிய பட்டு வீதி, கரையோரப்பட்டு வீதி, ஆசியான் நாடுகளுக்கிடையிலான விரைவு புகையிரத போக்குவரத்து வீதி என மூன்று திட்டங்களை இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு கொள்கை ஊடாக தனது வர்த்தக, பொருளாதார அபிவிருத்திக்காக முன்மொழிந்து செயற்படுத்தி வருகின்றது. இதற்காக தென்கிழக்காசியா தொடர்பாக இதுரை பின்பற்றி வந்த தனது கொள்கையினை சீனா மாற்றியமைக்க முற்பட்டுள்ளது. ஆயினும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் பொருளாதாரää பாதுகாப்பு பரிமாணங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு குழப்பமடைந்தே வருகின்றது.

Thanabalasingam Krishnamohan

Dr. Thanabalasingam Krishnamohan B.A.Hons.,M.Phil.,Ph.D. Senior Lecturer in Political Science Gr-1 Eastern University, Sri Lanka

More Posts - Website

Follow Me:
TwitterFacebookGoogle Plus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*